பாலியல் வன்கொடுமை-முறைப்பாடு செய்த இளம் பெண் மீது துப்பாக்கி சூடு..!

65

ராஜஸ்தானில் கடந்த ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டப்பட நபரால், துப்பாக்கியால் சுட்டப்பட்ட 25 வயது பெண் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம், கோட்புல்லு என்ற நகரில் கடந்த ஆண்டு ஜனவரி 16 ஆம் தேதி ராஜேந்திர யாதவ் என்பவர் 25 வயது பெண்ணொருவரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதானார். இவருக்கு எதிராக பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்திருந்த நிலையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு அந்நபர் கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்த ராஜேந்திர யாதவ் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ஜாமீனில் வெளியே வந்திருக்கிறார். அப்போது அப்பெண்ணிடம் தன் மீதான வழக்கை திரும்ப பெற கோரி மிரட்டி உள்ளார் அவர். வழக்கை திரும்ப பெற முடியாது என்று அப்பெண் உறுதியாக இருந்திருக்கிறார்.

இதனால் கோபமடைந்த ராஜேந்திர யாதவ் தனது கூட்டாளிகளான மஹிபால் குர்ஜார், ராகுல் குர்ஜார் ஆகியோருடன் இணைந்து அப்பெண்ணை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார். இதற்காக கடந்த சனிக்கிழமையன்று தனது சகோதரருடன் வேலை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த அப்பெண்ணை, ராஜேந்திர யாதவ் மற்றும் அவரது கூட்டாளிகள் வாகனத்தில் பின் தொடர்ந்துள்ளனர்.

அப்போது திடீரென துப்பாக்கியால் அப்பெண்னை தாக்கிய ராஜேந்திர யாதவ், கூர்மையான ஆயுதங்களை கொண்டும் அவரை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும் உடன் வந்த அவரது சசோதரரையும் தாக்கிவிட்டு, அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர். சம்பவம் நடந்த இடம், காவல் நிலையம் ஒன்றுக்கு மிக அருகில் இருந்த ஃப்ளையோவர் என கூறப்படுகிறது.

விவரம் அறிந்த காவல்துறையினர் தேடுதல் வேட்டையை தொடங்கிய நிலையில் ஹிபால் குர்ஜார், ராகுல் குர்ஜார் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். ராஜேந்திர யாதவ் இன்னும் சிக்கவில்லை என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் காயமடைந்த அப்பெண்ணுக்கு உள்ளூர் மருத்துவமனையில் தீவிர கிசிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவரின் உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அப்பெண்ணின் சகோதரருக்கும் அங்குள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து முக்கிய குற்றவாளியான ராஜேந்திர யாதவை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுவருகின்றனர்.

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணொருவர், புகார் கொடுத்ததற்காக கொடூரமான முறையில் குற்றம் சாட்டப்பட்டவரால் கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Get real time updates directly on you device, subscribe now.

Comments are closed.