தூய்மை திட்டத்திற்கான பூரண ஒத்துழைப்புகளை வழங்க தயார்..!{படங்கள்}

தூய்மை திட்டத்திற்கான பூரண ஒத்துழைப்புகளை வழங்க தயார் என யாழ்ப்பாணத்திற்கான புதிய இந்திய துணை தூதுவர் வடக்கு மாகாண ஆளுநரிடம் உறுதி

யாழ்ப்பாணத்திற்கான புதிய இந்திய துணைத் தூதுவர் செவிதி சாய் முரளி, வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களை இன்று சந்தித்தார். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று (28.02.2024) இந்த சந்திப்பு நடைபெற்றது.

மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள், மக்களின் தேவைகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் இதன்போது இந்திய துணைத் தூதுவருக்கு தெளிவுப்படுத்தினார்.

அதற்கமைய, வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி திட்டங்களுக்கு இந்திய அரசாங்கத்தின் ஒத்துழைப்பு தொடர்ச்சியாக வழங்கப்படும் என புதிய இந்திய துணைத் தூதுவர் செவிதி சாய் முரளி தெரிவித்தார். இளைஞர், யுவதிகளுக்கான தொழில்நுட்ப பயிற்சிகளை பெற்றுக்கொடுக்கவும், தீவுகளுக்கான படகு சேவையை விஸ்தரிக்கவும் நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்தார்.

சுற்றுலாத்துறை மேம்பாட்டிற்கான வசதிகளை ஒழுங்கு செய்வதுடன், தரை மற்றும் கரையோர தூய்மை திட்டத்திற்கு தேவையான பூரண ஒத்துழைப்பை வழங்குவதாகவும் யாழ்ப்பாணத்திற்கான புதிய இந்திய துணைத் தூதுவர் கூறினார். தூய்மை திட்டத்திற்கு தேவையான நிதியை இந்திய துணை தூதரகத்திலிருந்து ஒதுக்கவும் நடவடிக்கை எடுப்பதாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களிடம் யாழ்ப்பாணத்திற்கான புதிய இந்திய துணைத் தூதுவர் செவிதி சாய் முரளி உறுதியளித்தார்.

IMG 20240228 WA0145 IMG 20240228 WA0144 IMG 20240228 WA0143

Comments are closed.