தமிழரசுக் கட்சிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு எதிரான வழக்கு எதிர்வரும் சித்திரை மாதம் 25ஆம் திகதிக்கு யாழ்பாணம் மாவட்ட நீதிமன்றால்  ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி என்.சிறிக்காந்தா தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் மாநாட்டுக்கு எதிராக நீதிமன்றால் பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடையுத்தரவு தொடர்பான வழக்கு இன்றையதினம்(29) யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

குறித்த வழக்கு தொடர்பில்  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சட்டத்தரணி என்.சிறிக்காந்தா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த வழக்குகள் சுருக்கமாக முடிக்கப்படக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது என்பது இரண்டு தரப்பினரதும் பொதுவான நிலைப்பாடாக இன்று யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றத்திலே தெரிவிக்கப்பட்டது. இருந்தாலும் சட்ட விதிகளுக்கு அமைவாக இன்றைய தினம் நாங்கள் மறுமொழி தாக்கல் செய்வதற்கு திகதி குறிப்பிடுமாறு நான் கேட்டிருந்தேன்.

அந்த அடிப்படையில் எதிர்வரும் சித்திரை மாதம் 25ஆம் திகதிக்கு மறுமொழி தாக்கல் செய்யுமாறு வழக்கு தவணை இடப்பட்டு  இருக்கிறது,  அத்தோடு ஐந்தாவது எதிராளியான சண்முகம் குகதாசனுக்கு மீண்டும் அழைப்பு கட்டளை அனுப்பப்படுவதற்கும் உத்தரவிடப்பட்டிருக்கிறது.

முதலாவது மற்றும் மூன்றாவது எதிராளிகளாக பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் ஆகிய இருவர் சார்பிலும் நாங்கள் சட்டத்தரணி நியமன பத்திரத்தை தாக்கல் செய்து அந்த அடிப்படையில் எங்களுடைய நிலைப்பாட்டை மிக சுருக்கமாக குறிப்பிட்டு இருந்தோம்.

ஏனைய இரண்டு எதிராளிகள் சார்பிலும் வேறு சட்டத்தரணிகள் தங்களுடைய நியமன பத்திரத்தை சமபித்தார்கள் ஐந்தாவது எதிராளி சண்முகம் குகதாஸ் சார்பில் எவரும் ஆஜராகி இருக்க வில்லை, அவருக்கான அழைப்பு கட்டளை இதுவரையில் அவரிடம் கையளிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

வழக்காளியான தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நண்பர் குருபரன் ஏற்கனவே இரண்டு வாரங்களுக்கு வழங்கப்பட்ட தடை கட்டளையை மேலும் நீடிக்குமாறு தான் கோரவில்லை என தெரிவித்திருந்தார், அந்த வகையில் கட்டாணை தொடர்பாக எந்தவித நீடிப்பும் இன்று வழங்கப்படவில்லை, அவர் அவ்விதம் தெரிவித்ததற்கான காரணம் கட்டானை கடந்த 19ஆம் திகதி நடைபெற இருந்த மகநாடு தொடர்பாகவே குறிப்பிடப்பட்டிருந்தது.

அந்த திகதி கடந்து போய்விட்ட நிலையில் ஜதார்த்த ரீதியாக அதை நீடிக்குமாறு கூற முடியாதுஅந்த வகையில் தான் அவருடைய விண்ணப்பம் அமைந்திருந்தது,

எங்களுடைய தரப்பில் இந்த வழக்கு சுருக்கமாக முடிக்கப்பட கூடிய வாய்ப்பு இருக்கின்றது என்பதை சுட்டி காட்டினோம். இதே நேரத்தில் திருகோணமலை நீதிமன்றிலும் சமாந்தரமாக ஒரே நேரத்தில் இன்றைய தினம் இதே எதிராளிகளும் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நண்பர் சுமந்திரனையும் சேர்த்து வழக்கு தாக்கல் செய்யப்பட்டு கூப்பிடப்படுகிறது என்பதையும் தெரிவித்தோம்.

ஆகவே இந்த வழக்குகள் சுருக்கமாக முடிக்கப்படக்கூடிய வாய்ப்பு இருக்கிறது என்பது இரண்டு தரப்பினருடைய பொதுவா நிலைப்பாடாக இன்றைக்கு யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்றிலே தெரிவிக்கப்பட்டது என அவர் தெரிவித்தார்.

Comments are closed.