சிறிலங்கா கடற்படையால் படுகொலை செய்யப்பட்ட 10 மீனவர்களின் 30ஆம் ஆண்டு நினைவேந்தலில் திடீரென ஏற்றப்பட்ட தேசிய கொடியால் குழப்பம்..!{படங்கள்}

1994.02.18 அன்று வடமராட்சி கிழக்கு சுண்டிக்குளம் தொடுவாய் வாய்க்கால் கடலில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளை சிறிலங்கா கடற்படையால் படுகொலை செய்யப்பட்ட கட்டைக்காட்டை சேர்ந்த 10 மீனவர்களது 30ஆம் ஆண்டு நினைவேந்தல் நேற்று கட்டைக்காடு சென்மேரிஸ் மைதானத்தில்(18) அனுஷ்டிக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் இலங்கையின் தேசிய கொடி திடீரென ஏற்றப்பட்டதால் உறவுகளை இழந்த மக்கள் அதிர்ச்சியடைந்து தமது எதிர்ப்பை வெளிக்காட்டினர்

சென்மேரிஸ் விளையாட்டுக் கழகம் முன்னின்று செயற்படுத்திய இந்த நிகழ்வில் தேசிய கொடி ஏற்றுவது தொடர்பாக தமக்கு அறிவிக்கப்படவில்லை என்றும் இலங்கை கடற்படையே தமது உறவுகளை படுகொலை செய்ததால் இலங்கை தேசிய கொடியை குறித்த அஞ்சலி நிகழ்வில் ஏற்றியமை தாம் விரும்பவில்லை என்றும் சென்மேரிஸ் விளையாட்டு கழகத்திற்கு தமது எதிர்பை தெரிவிப்பதாக உறவுகளை இழந்தவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.

மீன்பிடிப்பதற்கு கட்டுமரங்களில் சென்ற தமது உறவுகளை ஒரே நாளில் ஈவு இரக்கமின்றி படுகொலை செய்த இலங்கை கடற்படையினர் தமக்கான நீதியை இதுவரை தராத போது எவ்வாறு தேசிய கொடியை குறித்த நிகழ்வில் ஏற்ற முடியும் என்றும் மக்கள் கேள்வி எழப்பினர்.

எமது உறவுகளை இழந்து 30 வருடங்களாக நாங்கள் கண்ணீரில் வாழும் போது அவர்களது புனிதமான நாளில் தங்களை அழைத்து இவர்கள் தம்மையும் குற்றவாளிகளாக்கியுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

IMG 20240218 151221 IMG 20240218 150603 IMG 20240218 151843

Comments are closed.