சாந்தனின் உடலத்தை இலங்கைக்கு அனுப்ப கோரி சென்னை நீதிமன்று அதிரடி உத்தரவு..!

101

உடல்நல பாதிப்பால் உயிரிழந்த சாந்தனின் உடலை இலங்கை கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சாந்தன், கடந்த 2022-ம் ஆண்டு உயர் நீதிமன்ற அறிவுறுத்தலின்பேரில் விடுவிக்கப்பட்டார்.

இலங்கை தமிழரான சாந்தன், திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தார். கடந்த ஜனவரி மாதம் 24-ம் திகதி அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதால், 27-ம் திகதி உயர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கல்லீரல் செயலிழப்பு மற்றும் பல்வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டிருந்த அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்நிலையில், நேற்று அதிகாலை சாந்தன் காலமானார். சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு திருச்சி சிறப்பு முகாமில் இருக்கும் தனது மகன் சாந்தனை இலங்கைக்கு அனுப்பி வைக்குமாறு இந்திய மத்திய அரசுக்கு இலங்கையில் உள்ள அவரது தாயார் பலமுறை கோரிக்கை வைத்தார்.

அத்துடன் சாந்தன் திருச்சி முகாமில் உயிருடன் இருக்கும்போதே, இலங்கையில் உள்ள தனது தாய் நோய்வாய்ப்பட்டுள்ளதால் அவரை கவனிக்க இலங்கை செல்ல வேண்டும். எனவே இலங்கைக்கு அனுப்பி வைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

உயர் நீதிமன்ற நீதிபதிகள் சுரேஷ் குமார், குமரேஷ் பாபு அடங்கிய அமர்வு, சாந்தன் தொடர்ந்த இந்த வழக்கை விசாரித்து வந்தனர்.

சில மாதங்களுக்கு முன் நடந்த இந்த வழக்கின் விசாரணையில் மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை என்று தமிழக அரசு தெரிவித்தது. கடைசியாக நடந்த விசாரணையின்போது, மத்திய அரசு அனுமதி வழங்கிவிட்டது.

விரைவில் சாந்தன் இலங்கைக்கு அனுப்பப்படுவார் என்று நீதிபதிகளிடம் தமிழக அரசு உறுதி அளித்திருந்தது. இந்த நிலையில் தான் நேற்று சாந்தன் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

சாந்தன் தொடர்ந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள் சுரேஷ் குமார், குமரேஷ் பாபு இருவரும், சாந்தனை இலங்கை அனுப்ப அனுமதி வழங்கியது எப்போது என்றும் மத்திய அரசிடம் வினா எழுப்பினர்.

மத்திய அரசு தரப்பிலோ, கடந்த ஜனவரி 22-ம் திகதியே அவருக்கு இலங்கை செல்ல அனுமதி அளிக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.

இதை கேட்ட நீதிபதிகள், “மத்திய அரசு ஜனவரி 22ம் திகதியே அனுமதி அளித்த பிறகும் சாந்தனை ஏன் இலங்கைக்கு அனுப்பவில்லை” என்று தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த தமிழக அரசு வழக்கறிஞர், “ஜனவரி 24ம் திகதி முதலே சாந்தன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவரால் நடக்க கூட முடியவில்லை என்பதற்காகவே இலங்கை அனுப்ப முடியவில்லை” என்று விளக்கம் அளித்தார்.

தமிழக அரசின் விளக்கத்துக்கு பின் தீர்ப்பளித்த நீதிபதிகள், “சாந்தனின் உடலை இலங்கை கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை நியமித்து தேவையான நடவடிக்கைளை மேற்கொள்ள வேண்டும்.

இலங்கை தூதரக அனுமதி, இறப்புச் சான்று உள்ளிட்டவற்றை பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றியது குறித்து மார்ச் 4-ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.

Get real time updates directly on you device, subscribe now.

Comments are closed.