குழந்தை பிள்ளைத்தனமாக கதைக்கும் தோழர்-இவராவது பதவியை துறக்கிறதாவது..!

ஜனாதிபதி தேர்தல் வருகிறது.ஜனாதிபதி தேர்தலில் யார் வருகிறார்கள் என்பது தெரியாது.ஜனாதிபதி தேர்தல் வந்தால் பாராளுமன்றம் தானாக கலையும்.அமைச்சு பதவிகள் எதுவும் இருக்காது அக்காலகட்டம் வரப்போகிறதை அறிந்து கடல் தொழில் அமைச்சர் தானாக ஏதோ பேசிக் கொண்டிருக்கின்றாரென இன்று வடமராட்சி ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் தலைவரும் யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத்தின் முன்னாள் உப தலைவருமான நா.வர்ணகுலசிங்கம் குற்றம் சுமத்தியுள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

இந்திய பிரச்சனை இன்று நேற்று அல்ல காலம் காலமாக கத்திக் கொண்டிருக்கிறோம் கடற்றொழில் அமைச்சர் வந்த பிறகுதான் இந்திய இழுவை மடி படகுகளின் வரத்து அதிகமாக காணப்படுகிறது.

இந்திய இழுவை மடி படகுகளை தடுக்காவிடில் அமைச்சர் தான் பதவியை இழப்பதாக,தான் மக்களுடன் சேர்ந்து போராடுவதாக கூறி இருந்தால் அந்த கருத்தை ஏற்க கூடியதாக இருக்கும்

தேர்தல் வந்துவிட்டது பாராளுமன்றம் கலைக்கப்படும் இனி யார் யார் அமைச்சராக வரப்போகிறார்களோ தெரியாது இப்படியான நேரத்தில் அமைச்சர் இந்தியா அழுத்தம் தந்தால் பதவியை துறப்பேன் என குழந்தை பிள்ளைத்தனமாக கதைத்துக் கொண்டிருக்கிறார்.

நீங்கள் பதவி துறந்தாலும் ஒன்றுதான் துறக்காவிடிலும் ஒன்றுதான், இதைத்தான் தொடர்ந்து சொல்லி மக்களை ஏமாற்றிவருகிறீர்கள்,இது நகைப்புக்குள்ளான விடயமாக உள்ளது இருக்கின்ற சொற்ப மாதத்துக்குள் எமது கடல் தொழிலாளர்களுக்கு நல்லதை செய்துவிட்டு போங்கள்

இராமேஸ்வரத்தின் இழுவை மடி படகு சங்கத்தின் தலைவர் வெளிப்படுத்திய கருத்துக்களை தவறென அவர் ஒப்புக் கொண்டதை நாம் வரவேற்கிறோம்

15வயதிலையே இந்தியக்கரைக்கு சென்று தாம் மீன்பிடித்து தங்களது வாழ்வாதாரத்தை பெருக்கிக் கொண்டதாகவும் எப்பொழுது இந்திய விசைப்படகுகள் இலங்கை எல்லைக்குள் வருகை தர தொடங்கியதோ அன்றில் இருந்து இந்திய எல்லைக்குள் சென்று மீன்பிடிப்பதை நிறுத்திக் கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அக்காலப்பகுதியில் இயந்திரம் பழுதடைந்து இலங்கை கடலுக்குள் வரும் படகுகளுக்கு உதவி செய்து,உணவு கொடுத்து நல்லபடியாக அனுப்பிவைத்ததாகவும் இன்று இலங்கை கடலுக்குள் வரும் அனைத்து படகுகளும் கைது செய்யப்படுவதாகவும் குறிப்பிட்ட அவர் கோடியாக்கரையில் இருந்து வருகை தந்த ஒரு படகை அனுப்பிவைத்ததால் தன் மீது வழக்கு போடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்

இவ்வாறு உங்களுக்காக நாங்கள் உரிமையுடன் கதைத்த போதும் உங்களது செயற்பாட்டால் கோபம் கொண்டு சில விடயங்களை பேசியதாகவும் மனவருத்தத்துடன் தெரிவித்தார்.

இந்தியன் இழுவை மடி படகுகள் எங்கள் எல்லைக்குள் வரும் போது நாம் பாதிப்படைகிறோம்,பெரும் முதலாளிகள் படகுகளை வாங்கி கொடுத்துவிட்டு அப்பாவி தொழிலாளர்களை அனுப்புவதால் அவர்கள் கைதுக்குள் உள்ளாகுகிறார்கள்.

இலங்கையில் அனைத்து வளங்களும் காணப்படுகின்ற போதும் அதை நாம் அனுபவிக்க முடியாமல் உள்ளது. பவளப்பாறைகளை அடியோடு அழிப்பதால் மீன்களின் இனப்பெருக்கம் குறைந்து இலங்கையின் கடல் வளம் அழிகிறது

எல்லைதாண்டாது தொழில் செய்யுங்கள்,வெளிச்சம் போடாமல் வருகை தந்து எங்களது மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கிறீர்கள்,எனக்கே மூன்றுமுறை உங்களால் வலை இல்லாமல் போயுள்ளது

சிறிய இயந்திரங்களை வைத்து வெளி நாட்டு வசதி இல்லாமல் நாங்கள் தொழில் செய்கிறோம்,உங்களை ஒரு மாதம் சுதந்திரமாக விட்டால் இலங்கையில் மீனவர்கள் வாழ முடியாத நிலை உருவாகி அனைத்தையும் நீங்கள் அழித்து சென்று விடுவீர்கள்

நாங்களும் ஒட்டுமொத்தமாக அனைத்தையும் இழந்து கையேந்தி தொழில் தேடி தொழில் செய்து வருகிறோம் எங்களது தொழிலை திருப்பவும் அழித்து கோடான கோடி மீன்களை அள்ளிச் செல்கிறீர்கள்,உழவு இயந்திரம் எவ்வாறு உழுதுகிறதோ அவ்வாறுதான் எமது கடலை உழுதுகிறீர்கள்

நாம் சுடுவோம்,எறிவோம்,அடிப்போம் என்று பேசுகிறோம் ஆனால் செய்ய விரும்பவில்லை வேதனையில்த்தான் கதைக்கின்றோம் இந்தியன் இழுவை மடியை எரிப்பதாக முடிவெடுத்த மீனவர்கள் ஒரு சில அதிகாரிகளின் ஆலோசனையால் அதை கைவிட்டுள்ளனர்.

நாங்கள் அமைதியாக உங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம்.

கச்சதீவில் பேச்சுவார்த்தை நடத்தி உங்களுக்கு எங்களது துன்பங்களை பற்றி கூறினோம்.அதை கேட்டு நீங்கள் கண்ணீர் விட்டீர்கள்.எங்களது கால் கடலில் நனையாவிட்டால் இன்றில் எங்களது வீட்டில் சாப்பாடு இல்லை

தொழில் செய்யாதவன் கூறும் கருத்துக்களுக்கு நாம் பொறுப்பல்ல

நடக்க போகும் கறுப்புக் கொடி போராட்டமும் கட்சி ஒழுங்கு செய்த போராட்டமே.உங்களுடன் பேச்சுவார்தைக்கு வருகை தந்தாலும் அது கட்சி சார்ந்தவர்களே வருவார்கள் உண்மையான மீனவர்கள் வரப்போவதில்லை

இனியாவது எங்களது இறையாண்மையை பாதிக்காது எங்களது கடல் வளத்தை அழிக்கும் நடவடிக்கையை கைவிட்டு இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்காதவாறு இந்திய எல்லைக்குள் இந்திய மீனவர்கள் தொழில் புரிய வேண்டுமென கேட்டுக் கொள்வதாகவும் குறிப்பிட்டார்.

Comments are closed.