கடல்வழியாக 5 ஈழ அகதிகள் தமிழகத்தில் இன்று தஞ்சம்

இலங்கையில் இருந்து அகதிகளாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 குழந்தைகள் உட்பட ஐந்து பேர் ஒன்றாம் மணல் தீடையில் தஞ்சமடைந்துள்ள நிலையில் இன்று புதன்கிழமை காலை அவர்களை மீட்டு மரைன் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசியத் தேவைகளுக்காக கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இதனால் கடந்த 2022 ஆண்டு மார்ச் மாதம் முதல் இலங்கையில் இருந்து இலங்கைத் தமிழர்கள் தனுஷ்கோடிக்கு அகதிகளாக வந்துள்ளனர்.
WhatsApp Image 2024 02 07 at 11.19.24 AM

இந்நிலையில் இலங்கை வவுனியா மாவட்டம் நெடுங்குழிப் பகுதியை நந்தகுமார் அவரது மனைவி மற்றும் அவரது 3 குழந்தைகள் என ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் நேற்று (6) மாலை மன்னாரில் இருந்து ரூ.1.50லட்சம் கொடுத்து படகில் புறப்பட்டு இன்று அதிகாலை ராமேஸ்வரம் அடுத்துள்ள தனுஷ்கோடி அரிச்சல்முனை ஒன்றாம் மணல் திட்டில் கடற்கரையில் வந்திறங்கினர்.

தகவலறிந்த ராமேஸ்வரம் மரைன் பொலிஸார் இலங்கைத் தமிழர்களை மீட்டு மண்டபம் மரைன் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
WhatsApp Image 2024 02 07 at 11.19.24 AM (2)

விசாரணையில் இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதில் இருந்து அத்தியாவசிய பொருட்களின் விலை சற்று குறைந்த வந்த நிலையில் தற்போது மீண்டும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் குழந்தைகளுடன் இலங்கையில் வாழ வழி இன்றி தமிழகத்திற்கு அகதிகளாக வந்ததாக தெரிவித்தனர்.

பாதுகாப்பு வட்டார அதிகாரிகளின் விசாரணைக்கு பிறகு 5 பேரும் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்பட உள்ளனர்.

பொருளாதார நெருக்கடி காரணமாக தமிழகத்திற்கு இலங்கையிலிருந்து வந்த அகதிகளின் எண்ணிக்கை 293 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது

Comments are closed.