உலகக்கோப்பைக்கு பின்னர் வார்னர் ஓய்வு

எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடருக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஆஸ்திரேலிய அணியின் டேவிட் வார்னர் ஓய்வு பெற உள்ளதாக தெரிவித்துள்ளார். மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 36 பந்துகளில் 70 ரன்கள் பதிவு செய்த அவர் இதனை தெரிவித்துள்ளார்.

37 வயதான வார்னர், கடந்த ஜனவரி மாதம் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். பாகிஸ்தான் அணிக்கு எதிராக சிட்னி மைதானத்தில் தனது கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடி இருந்தார். கடந்த ஆண்டு இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டி அவரது கடைசி ஒருநாள் போட்டியாக அமைந்தது. இந்நிலையில், டி20 கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற உள்ளதாக தற்போது தெரிவித்துள்ளார்.

“அடுத்த ஆறு மாதங்கள் சிறந்த பயணமாக இருக்கும். எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடர் வரையில் நான் சர்வதேச களத்தில் விளையாட விரும்புகிறேன்” என வார்னர் தெரிவித்தார். மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆட்ட நாயகன் விருதை வென்ற அவர் இதனை தெரிவித்துள்ளார். இந்த போட்டியில் 11 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. இந்தப் போட்டி வார்னர் விளையாடிய நூறாவது சர்வதேச டி20 போட்டியாக அமைந்தது.

Comments are closed.