இளஞ்செழியன் தாறுமாறு கேள்வி..!

கட்சியின் யாப்பை மீறி செயற்படுபவர்களை கட்சியிலிருந்து நீக்குவதா? அல்லது நீதிகேட்டு நீதிமன்றம் சென்றவரை கட்சியிலிருந்து நீக்குவதா? என இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் பீற்றர் இளஞ்செழியன் கேள்வி எழுப்பியுள்ளார்.

முல்லைத்தீவு ஊடக அமையத்தில் நேற்றையதினம் (16.02.2024) மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்,

தொடர்ந்து மேலும் கருத்து தெரிவிக்கையில்,

தமிழரசு கட்சியின் யாப்பினை மீறியமை தொடர்பாக நீதிமன்றத்தினை நாடியிருந்தேன். இது தொடர்பாக என்னால் யாழ் நீதிமன்றத்திலே மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டு இலங்கை தமிழரசுக் கட்சியினுடைய 17 ஆவது மாநாடும் அதனை ஒட்டிய பொது சபையையும் 14 நாட்களுக்கு தடையுத்தரவினை பெற்றிருந்தேன். இது கட்சிக்கு எதிரானதல்ல கட்சியின் யாப்பினை மீறியமைக்காவே தடையுத்தரவினை பெற வேண்டியிருந்தது.

ஒரு மாகாநாட்டினை எங்கு கூட்டுவது , எந்த நேரத்தில் கூட்டுவது என்பது தொடர்பான முழு அதிகாரமும் மத்திய செயற்குழுவிற்கு மட்டுமே உள்ளது. ஆனால் நான்கு , ஐந்து பேர் இணைந்து கட்சியினை தவறாக வழிநடத்துவதற்கும் தாங்கள் நினைத்ததனை மாற்றி அமைப்பதற்காகவும் மாநாட்டினை நடாத்த அழைப்பு வழங்கப்பட்டருக்கின்றது. ஆகவே நான் மத்திய செயற்குழு உறுப்பினர் என்ற வகையில் வினாவியிருந்தேன் அதற்கு பதில் கிடைக்கவில்லை.

அதேபோல் ஒரு மகாநாடு வைக்க வேண்டுமாக இருந்தால் மத்திய செயற்குழு தான் ஏற்பாடு செய்கின்ற முழு பொறுப்பும் இருக்கின்றது. கட்சியினுடைய உயர்மட்ட குழு கூடாமல் மாநாட்டினை கூடுவதென்பது கட்சியினுடைய யாப்பினை மீறும் செயற்பாடாகும். அதனடிப்படையிலே இந்த வழக்கினை தாக்கல் செய்திருந்தேன்.

இதேபோல் 2022 ஆம் ஆண்டு என்னை கட்சியிலிருந்து நீக்க முற்பட்டிருந்தார்கள் . அதனையும் நான் சவாலுக்குட்படுத்தி யாழ் நீதிமன்றத்திலே வழக்கு தொடர்ந்திருந்தேன். அவ் வழக்கு தற்போதும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அன்றும் நான் வழக்கு தொடர்ந்ததற்கு காரணம் ஒழுக்காற்று நடவடிக்கை இல்லாமல் கட்சியிலிருந்து நீக்க முடியாது. அதனடிப்படையிலே வழக்கினை தாக்கல் செய்திருந்தேன்.

யார் தலைவராக இருந்தாலும் யாப்பினை மீறி செயற்பட கூடாது என்பதனை அடையாளப்படுத்தியே இவ் வழக்கினை தாக்கல் செய்திருக்கின்றேன்.

இலங்கை தமிழரசுக் கட்சியினை நான் எதிர்ப்பதாகவும், எதிராக செயற்படுவதாகவும் சிலர் தவறான தகவல்களை பரப்பி கொண்டிருக்கின்றார்கள். இலங்கை தமிழரசுக் கட்சியினுடைய யாப்பினை மீறி செயற்பட்டாலும், எந்த சந்தர்ப்பத்திலும் மீறினாலும் நீதிமன்றிற்கு சென்று தடையை பெற எங்களுக்கு உரிமை உண்டு.

நீதிமன்றம் சென்றவர்கள் அனைவரையும் கட்சியில் இருந்து நீக்க வேண்டும், நீக்கப்படுவார்கள் என்ற கருத்துக்கள் தற்போது கூறப்படுகின்றன. நீதி கேட்டு நீதிமன்றம் சென்றவரை கட்சியிலிருந்து நீக்குவதாக இருந்தால் யாப்பை மீறியவர்களுக்கு என்ன நடவடிக்கை என்ற கேள்வியையும் எழுப்புகின்றேன். யாப்பை மீறியவர்களுக்கு தான் ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொண்டு கட்சியிலிருந்து நீக்க வேண்டுமே ஒழிய நீதிமன்றம் சென்றதற்கு கட்சி நீக்கமோ, ஒழுக்காற்று நடவடிக்கையோ மேற்கொள்ளப்பட்டாலோ மீண்டும் நீதிமன்றம் செல்ல தயாராக இருக்கின்றேன் என மேலும் தெரிவித்தார்.

Comments are closed.