இந்து இளைஞர் மன்றத்தின் காணியை அபகரிக்க முயற்சி

20

மூதூர் இந்து இளைஞர் மன்றத்தின் காணியினுள் பொலிசாரின் உத்தரவையும்மீறி சட்டத்திற்கு முரணான வகையில் கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மன்றத்தின் போசகர் பொ.சச்சிவானந்தம் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், மூதூர் ஜாயா நகர் கிராம சேவகர் பிரிவில், மணிக்கூட்டுக் கோபுரத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ள குறித்த காணியானது நீண்டகாலமாக இந்து இளைஞர் மன்றத்தினால் பராமரிக்கப்பட்டு வருகின்றது.

மன்றத்திற்கு சொந்தமான குறித்த காணியை சிலர் பொய்யான ஆவணங்களை தயாரித்து அபகரிக்க முயல்கின்றார்கள் இது தொடர்பாக மூதூர் பொலிஸ் நிலையத்திலும், திருகோணமலை விசேட குற்றப்புலனாய்வுப் பிரிவிலும் முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

குறித்த காணி அபகரிப்பு தொடர்பாக திருகோணமலை பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் முறையிட்டதைத் தொடர்ந்து கடந்த மாதம் 10 ஆம் திகதி குறித்த தரப்பினர் உட்பட, முறைப்பாட்டாளர்களையும் மூதூர் பொலிஸ் உத்தியோகத்தர்களையும் அழைத்து விசாரணை இடம்பெற்றது. இதன்போது ஆவணங்களை பார்வையிட்ட பொலிஸ்மா அதிபர் சம்பந்தப்பட்ட நபர்களை காணிக்குள் நுழையக்கூடாது என எச்சரித்ததோடு விசேட குற்றப்புலனாய்வுப் பிரிவிலும் முறைப்பாடு ஒன்றை மேற்கொண்டுமாறும் மன்றத்தினரை பணித்திருந்திருந்தார்.

அதற்கமைய கடந்த மாதம் 26 ஆம் திகதி விசேட குற்றப்புலனாய்வுப் பிரிவிலும் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த காணியினுள் பொலிசாரின் உத்தரவையும்மீறி சட்டத்திற்கு முரணான வகையில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

குறித்த செயற்பாடானது இனங்களுக்கு இடையேயான நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Get real time updates directly on you device, subscribe now.

Comments are closed.