இந்திய துணை தூதரகத்தை முடக்கி தொடர் போராட்டங்கள் முன்னெடுப்போம்..!

37

எதிர்காலத்தில் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்திற்கு முன்னால் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து தூதரகத்தின் செயல்பாடுகளை முடக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என வழி வடக்கு மீனவ கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தின் தலைவர் பாக்கியநாதன் றேகன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் யாழ்ப்பாண மாவட்ட மீனவ அமைப்புகளின் சம்மேளன அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் இந்திய துணை தூதரகத்திற்கு முன்னால் இழுவை மடி தொழிலுக்கு எதிரான போராட்டம் ஒன்றினை மேற்கொண்டிருந்தோம். அதற்கான எந்த ஒரு தீர்வுகளும் இந்திய துணை தூதரகத்தால் எங்களுக்கு பெற்றுத் தரப்படவில்லை.

இந்தியத் துணைத் தூதரகத்திடம் நாங்கள் மகஜரை கொடுத்துள்ளோம். அவர்கள் இன்று வரை எங்களுக்கு பதில் தரவில்லை என்றால், இந்தியத் துணைத் தூதரகமானது யாழ்ப்பாணத்தில் டிசா கொடுப்பதற்கு மட்டும் தான் இருக்கிறது. எங்களுக்கான பதில் இதுவரை கிடைக்கவில்லை.

இந்திய மக்களால் தான் எங்களுக்கு பிரச்சனையாக உள்ளது. ஆனால் அந்தப் பிரச்சினையை தீர்க்குமாறு கூறினாலும் தூதரகமானது அதற்கு நடவடிக்கை எடுக்காமல் இருக்கின்றது. எத்தனையோ தடவை எமது கடல் தொழில் சமூகம் சார்பில் மகஜர்களை இந்திய தூதரகத்திடம் கொடுத்துள்ளோம். ஆனால் இன்றுவரை நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.

இனிவரும் நாட்களில் நாங்கள் இந்திய துணை தூதரகத்திற்கு முன்னால் தொடர் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டி ஏற்படும். அவர்களது சேவைகளை முடக்க வேண்டிய கட்டம் ஏற்படும். ஏனென்றால் இவர்கள் மக்களுடைய பிரச்சினைகளை இதுவரை இந்திய நாட்டு மத்திய அரசுக்கு எடுத்துச் சொல்லவில்லை. இது எமக்கு மிகவும் கவலையை அளிக்கிறது. எனவே இந்தியத் துணைத் தூதரகம் மத்திய அரசின் பதிலை எமக்கு கூற வேண்டும் என்றார்.

Get real time updates directly on you device, subscribe now.

Comments are closed.