இந்திய இலங்கை மீனவர்கள் பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு..!{படங்கள்}

122

இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினைக்கு விரைவில் நிலையானதொரு தீர்வை காணுமாறு இந்திய அரசிடமும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடமும் கோரிக்கை விடுத்துள்ளோம் – என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள  43 தமிழக மீனவர்களை அமைச்சர் நேரில் சென்று சந்தித்தார். அவர்களிடம் சுகம் விசாரித்ததுடன், அவர்களுக்குள்ள பிரச்சினைகளை கேட்டறிந்துகொண்டார்.

அதன்பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அமைச்சர் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,
“யாழ்ப்பாணம் சிறையில் உள்ள 43 தமிழக மீனவர்களை சந்தித்தேன். அவர்கள் ஏன் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது பற்றி எடுத்து கூறினேன். அவர்களும் அதனை ஏற்றுக்கொண்டனர். 43 மீனவர்களில் இருவர் கடத்தல் சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளனர். ஏனைய 41 மீனவர்களுக்கும் இலங்கை அரசு மூலமாக அல்லது, எம்மால் முடிந்த உதவிகளை நிச்சயம் செய்வோம். இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என நம்புகின்றேன். இலங்கை பொலிசார் தம்மை நன்றாக நடத்துகின்றனர் என மீனவர்கள் தெரிவித்தனர்.

வடக்கில் உள்ள மீனவர்களும் தமிழர்கள், போரால் பாதிக்கப்பட்டவர்கள், சிறிய படகுகளை வைத்துக்கொண்டுதான் அவர்கள் தமது வாழ்க்கையை கொண்டு நடத்துகின்றனர். அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடாது.

தமிழக மீனவர்கள் ரோலர் படகுகளைப் பயன்படுத்தி அதிகளவான மீன்களை பிடிக்கின்றனர், இலங்கை கடல் வளமும் சேதமடைகின்றது. இது கடல்சார் சட்டங்களையும் மீறும் செயலாகும். மீனவர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணுமாறு இந்திய அரசிடமும், இலங்கை ஜனாதிபதியிடமும் நாம் கோரிக்கை முன்வைத்துள்ளோம்.” – என்றார்.

IMG 20240217 WA0025 IMG 20240217 WA0026 IMG 20240217 WA0027 IMG 20240217 WA0028

Get real time updates directly on you device, subscribe now.

Comments are closed.