அதிகாரிகளையும் கிராம மட்ட அமைப்புக்களையும் புறம் தள்ளும் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீடு!

நீண்ட காலத்தின் பின் அரசாங்கத்தினால் பொது மக்களின் அபிவிருத்திக்கென வரவு செலவு திட்டத்தின் மூலம் ஒதுக்கப்பட்ட பன்முகப்படுத்தப்பட்ட நிதியானது இம்முறை மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவரின் ஊடாக கிராமங்களுக்கு பிரித்து வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

குறித்த நிதி ஒதுக்கீட்டை கிராமங்களில் உள்ள பொது அமைப்புக்களின் அபிப்பிராயங்களையும் விருப்பங்களையும் கேட்டறிந்து அவ் நிதியை பயன்படுத்துமாறு நிதி அமைச்சினால் சுற்று நிருபங்கள் வெளியிடப்பட்டு இருந்த போதும் மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழு என்ற பெயரில் தனது அரசியல் சுயலாபங்களுக்காக தவறான சில நடவடிக்கைகளை மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவர் மேற்கொள்வதாக பொதுமக்களினால் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குறித்த விடயம் சம்பந்தமாக மன்னார் எழுத்துார் கிராமத்தின் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் தமது ஆதங்கத்தை நேற்று பிரதேச செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் வெளிப்படுத்தியுள்ளனர்.

மன்னார் எழுத்துார் கிராமத்திற்கு 20 லட்சம் நிதி ஒதுக்க பட்டதாகவும் அவ் நிதியை பயன்படுத்துவது தொடர்பாக அக் கிராமத்தின் கிராம மட்ட அமைப்புக்களுடனான கூட்டம் கடந்த மாதம் 2ம் திகதி நடைபெற்ற போது இவ் நிதியை சிறிது சிறிதாக பிரித்து வீணடிக்காமல் அனைத்து கிராம மக்களுக்கும் பயன்படும் விதத்தில் ஒரு வேலை திட்டத்தை முன்னெடுக்க மக்கள் தமது விருப்பத்தை தெரிவித்து இருந்தனர்.அந்த முன்மொழிவு பிரதேச செயலகத்தின் ஊடாக மாவட்ட அபிவிருத்திக் குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இருந்த போது மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவர் காதர் மஸ்தான் பாராளுமன்ற உறுப்பினரின் குழுவினர் குறித்த திட்டத்தை மாற்ற வேண்டும் என்ற நோக்கில் எழுத்துார் கிராமத்தில் உள்ள ஒரு சில அமைப்புக்கள் அதாவது விளையாட்டுக் கழகம் மற்றும் கோவில் அமைப்புக்களின் அவ் நிதியை பிரித்து வழங்குமாறு கோரிக்கை கடிதம் ஒன்றைப் பெற்று மக்கள் வேறு தேவைகளையும் கோரி உள்ளனர் என்று மீண்டும் கடந்த மாதம் 14 ம் திகதி மன்னார் பிரதேச செயலகத்தின் உதவி திட்ட பணிப்பாளரின் தலைமையில் அக்கிராமத்தில் கூட்டம் இடம் பெற்றது.

அக் கூட்டத்திலும் பொது மக்களும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் தாம் முன்னர் குறிப்பிட்ட.வேலைத்திட்டத்தினை ஏற்றுக்கொண்டு அதனையே முன்னிலைப் படுத்தினர் .
அக்கூட்டத்தில் இவ் வேலைத்திட்டத்தை தாம் ஏன் முன் மொழிகின்றோம் என்ற காரணமும் தெளிவாக கூறப்பட்டு அவரும் அதை ஏற்றுக்கொண்டு இத் திட்டத்தையே அனுப்பி வைக்கிறேன் என்று மாவட்ட அபிவிருத்திக் குழுவிற்கு அத்திட்டத்தை அனுப்பி வைத்தார்.

ஆனால் மீண்டும் ஆக்க பூர்வமாக சிந்திக்க தெரியாத மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் அவரின் எடுபிடிகள் சிலரும் மீண்டும் எழுத்துார் கிராமத்தின் ஒரு சிலரிடம் அவர்களின் வீட்டுக்குச் சென்று கடிதங்களை பெற்று அவ் நிதியை பிரித்துத் தான் வழங்குவோம் என்ற அழுத்தத்தை பிரதேச செயலாளர் மற்றும் தொடர்புடைய ஏனைய உத்தியோகத்தர்கள் மீது பிரயோகித்ததினால் மீண்டும் எழுத்துார் கிராமத்தின் பிரதிநிதிகள் அவசர அவசரமாக அழைக்கப்பட்டு மீண்டும் நேற்றைய தினம் காலை 8.30 மணிக்கு பிரதேச செயலாளரின் தலைமையில் மீண்டும் பொது அமைப்புக்களின் பிரதி நிதிகளை அழைத்து கூட்டம் இடம் பெற்றது.

இக் கூட்டத்தில் பிரதேச செயலாளர்களும் சக உத்தியோகத்தர்களும் மக்களுடன் இணைந்து எடுக்கும் முடிவுகள் அரசியல் பலத்தினால் மாற்றியமைக்கப்படுகிறது என்ற ஆதங்கம் பொது மக்களினாலும் உத்தியோகத்தர்களினால் முன்வைக்கப்பட்டது.இக் கூட்டத்தில் மீண்டும் தங்கள் விருப்பத்தின் படி நிதியை பிரித்து வழங்குவதாக நடவடிக்கை மேற்கொள்வதாக அறிவிக்கப்பட்டது.

இதைத் தாண்டிச் செல்லவும் அரச அதிகாரிகளுக்கு முடியாது என்பதும் உணரப்பட்டதாக இருந்தாலும் இவ் நிதி என்ன அடிப்படையில் பிரிக்கப்பட்டது? என்பது பிரதேச செயலாளருக்கும் தெரியாது .திட்டப்பணிப்பாளருக்கும் தெரியாது. இது தான் அபிவிருத்தி குழுவின் அபிவிருத்தி செயற்பாடு. இத்தவறுகளை சுட்டிக்காட்டவோ தட்டிக் கேட்கவோ.எமது மாவட்டத்துக்கு பொருத்தமான அரசியல் பிரதிநிதிகள் இல்லை என்ற ஆதங்கத்தை மக்கள் முன் வைத்தனர்.

20181102150025 IMG 4459

Comments are closed.