28.4 C
Jaffna
September 19, 2024
Uncategorizedஇலங்கை செய்திகள்

அன்புக்குரிய முஸ்லிம் வாக்காளர்களுக்கு சஜித் பிரேமதாசாவின் திறந்த மடல்!

செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக நாட்டின் முஸ்லிம் வாக்காளர்களுடன் எழுத்து மூலம் உரையாடுவதற்கு கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை பெரும் பேராக கருதுகிறேன்.

எமது தாய் நாடு பாரிய நெருக்கடிக்களை எதிர்நோக்கியுள்ள சந்தர்ப்பத்தில், இலங்கை வாழ் மக்களில் முக்கிய அங்கமாக உள்ள முஸ்லிம் சமூகமும் ஏனைய சமூகங்களைப் போல் நாட்டிற்கு ஆற்றிவரும் அளப்பரிய பங்களிப்பை நன்றியுடன் நினைவுகூறுகின்றேன்.

இந்நாட்டில் உருவான பெரிய அரசியல் கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி உருவாக்கப்பட்டு சில மாதங்களுக்குள் கட்சி பெற்ற வெற்றியில் முஸ்லிம்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.

அன்று முதல் இன்றுவரை முஸ்லிம்கள் பெரும்பான்மையினர் எமது கட்சிக்கு தமது ஆதரவினை வழங்கி வருகின்றனர். இம்முறையும் எமது கட்சிக்கு அதே ஆதரவை வழங்குவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது.

ஐக்கிய மக்கள் கூட்டணியின் வெற்றியினை உறுதிப்படுத்த இந்நாட்டின் சிறுபான்மை சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பல கட்சிகளும், சிவில் அமைப்புகளும் முன்வந்து இரவு பகலாக உழைத்து வருகின்றன. கடந்த காலங்களில் முஸ்லிம் சமூகம் என்ற வகையில் எதிர்நோக்கிய பிரச்சினைகளை நான் நன்கு அறிவேன்.

நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான
சக்தி எமது கூட்டணிக்கு இருக்கிறது. கடந்த காலத்தில் முஸ்லிம் சமூகம் என்ற வகையில் நீங்கள் எதிர்நோக்கிய துன்பம், துயரங்களுக்காக எம்மால் முடிந்தளவு குரல் கொடுத்தோம்.

கோட்டாபய அரசு அமுல்படுத்திய ஜனாஸா எரிப்புக்கான முழுமையான எதிர்ப்பை பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் தெரிவித்து வந்தோம்.

அரசிலிருந்த முஸ்லிம் தலைவர்கள் வாயை மூடிக்கொண்டு மௌனம் சாதிக்கும் போது நாம் முழுமையாக முஸ்லிம் சமூகத்தின் பக்கம் இருந்து குரல் கொடுத்து வந்தோம். முஸ்லிம் சமூகம் இந்நாட்டின் வரலாற்றுலே இவ்வாறான கொடூரத்தை எதிர்நோக்கவில்லை.

நாம் முஸ்லிம் சமூகத்தின் பக்கம் இருந்து கொண்டு குரல் கொடுத்ததோடு, அப்போதைய அரசு இந்த கொடூரத்தை நிறுத்துவதற்கு நாம் செயற்பட்டதை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள்.

இந்த கொடூர தீர்மானத்தை எடுத்தவர்களுக்கு எதிராக சட்ட ரீதியாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுப்பதற்கு எமது அரசு தயங்க மாட்டாது என்பதை உறுதியாக தெரிவிக்கின்றேன்.

எமது நாட்டின் நலன்களுக்கும் சர்வதேச அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கும் தீய சக்திகளின் செல்வாக்கு இங்கு ஓங்குவதற்கு காரணமாக இருக்கும் தலைவர்களை நீங்கள் நன்கு அறிவீர்கள்.

காஸா யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதாக காட்டி கொண்டு , பலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக செயற்படும் ஹூதிகளுக்கு எதிராக போராடுவதற்கு எமது படையினரை அனுப்பி வைத்தது யார் என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள்.

அரசியல் நலன்களுக்காக இரட்டை வேடமிடும் தலைவர் யார் என்பதையும் நீங்கள் நன்கு அறிவீர்கள்.

இப்படியான இரட்டை நிலைப்பாடு எமது அரசில் இருக்காது. எனது தந்தை காலஞ்சென்ற ரணசிங்க பிரேமதாச அவர்கள் ஜனாதிபதியாக இருக்கும் போது, சர்வதேச சட்டங்களை மதித்து, ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை நிறுத்தும் வரையில், இஸ்ரேலுடன் எந்த ஒரு உறவும் தேவையில்லையெனக் கூறி, இஸ்ரேல் தூதுவராலயத்தை இலங்கையில் இருந்து 24 மணிநேரத்தில் வெளியேற்றி பலஸ்தீனத்துக்கும், பலஸ்தீன போராட்டத்திற்கும் ஆதரவு வழங்கியதை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள்.

அதேபோன்று, நானும் சுதந்திர பலஸ்தீன் உருவாகுவதற்கு நிச்சயமாக தொடர்ந்து குரல் கொடுப்பேன்.

முஸ்லிம்கள் இந்த நாட்டின் ஆயிரம் வருடங்களுக்கு மேலாக நாட்டுக்கு அளப்பரிய பங்காற்றி வருகிறார்கள். கடந்த காலங்களில் நீங்கள் எதிர்நோக்கிய பல்வேறு பிரச்சினைகளை நாங்கள் அறிவோம். அதற்கான தீர்வுகள் எமது அரசினால் வழங்கப்படும். உங்களது சமய உரிமைகளை பாதுகாப்பதற்கு நாம் உத்தரவாதம் அளிப்போம்.

ஆரம்ப முதல் நீங்கள் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவு வழங்கினீர்கள். இன்று அந்த கட்சி, அந்த கட்சியின் சார்பில் போட்டியிடவில்லை. இன்று அந்த கட்சி தடம்புரண்டு வேறு திசையில் சென்று கொண்டிருக்கிறது.

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவின் ஏகமனதான தீர்மானத்தின் பிரகாரம் உருவான ஐக்கிய மக்கள் சக்தி, சகல இன மக்களையும் அரவணைத்துக் கொண்டு பயணிக்கிறது. ஐக்கிய தேசியக் கட்சியின் உண்மையான முற்போக்கு செயற்பாடுகளை ஐக்கிய மக்கள் சக்தியிலேயே காணமுடிகிறது.

எமது கட்சியானது இந்நாட்டில் வாழும் சகல இன மக்களுக்குமுரிய கட்சியாகும். உங்கள் சமூகத்தின் பல்வேறு பிரதான அரசியல் கட்சிகள் எம்மோடு இணைந்துள்ளன.
உங்களது சமூகத் தலைவர்கள் பலர் எங்களோடு இணைந்து ஒன்றாக தேச நலனுக்காக செயற்படுகின்றனர்.

மதம் இல்லை என்று கூறுபவர்களுக்கு வாக்களித்து விட்டு, பின்பு நீங்கள் மீண்டும் பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டாம் என உங்களை வினயமாக வேண்டுகிறேன்.

பொருளாதார ரீதியான சவால்களை எதிர்கொள்ளக் கூடிய பிரதான வழிமுறையானது, வெளிநாடுகளுடன் நல்ல தொடர்பினை பேணுவதில் தங்கியுள்ளது. அந்த தொடர்புகளும் சர்வதேச உறவுகளும் எமக்கு இருக்கின்றன. நாம் மேற்கு நாடுகளுடனும், அயலிலுள்ள இந்தியா, பாகிஸ்தான் மற்றும் அரபு இஸ்லாமிய நாடுகளுடனும் நெருங்கிய உறவுகளை பேணி வருகிறோம்.

கடந்த காலங்களில் அரபு முஸ்லிம் மற்றும் மேற்கு நாடுகளுடன் சரியான எமது உறவை பேணத் தவறியமையினாலேயே எமது நாடு பல பிரச்சினைகளை எதிர்நோக்கியது. அரபு இஸ்லாமிய நாடுகளுடன் நாம் நெருங்கிய உறவினை பேணி வருகிறோம். நாம் ஆட்சிக்கு வந்தால் அரபு நாடுகள் கைகொடுத்து உதவும்.
குறிப்பாக அரபு நாடுகளுடன் எமது நாட்டிற்கு மிகச் சிறந்த தொடர்புகள் இருந்து வந்தன. எமது அரசாங்கத்தின் கீழ் இந்த உறவுகள் மீள புதுப்பிக்கப்படும்.

வடக்கில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 30 வருடங்கள் கடந்தும் இன்றும் முறையாக குடியேற்றப்படாமல் நாடோடிகளாக வாழ்ந்து வருவதை நாம் அறிவோம். எமது அரசில் இந்த மக்களை மீளக்குடியமர்த்தி, அவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வுகளை பெற்றுக் கொடுப்பேன். முஸ்லிம் சமூகத்தின் கல்விப் பிரச்சனைகளுக்கு தீர்வினைப் பெற்றுக் கொடுத்து, இந்த சமூகத்தின் கல்வி மேம்பாடு குறித்தும் கவனம் செலுத்துவேன்.

முற்போக்கு தேசியவாதம் எமது கட்சியின் பிரதான அடிப்படை கொள்கைகளில் ஒன்றாக அமைந்து காணப்படுகிறது. முஸ்லிம்கள் சம உரிமைகளுடன் நிம்மதியாக வாழும் சூழலை நான் உறுதிப்படுத்தித் தருவேன். முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக கொண்டுவரப்படும் எந்த அழுத்தங்களுக்கும் அடிபணிய மாட்டேன். எதிர்க்கட்சித் தலைவராக நான் முன்னெடுத்த பிரபஞ்சம் ஸ்மார்ட் வகுப்பறைத் திட்டங்களை இன மத வேறுபாடின்றி சகலரையும் உள்ளடக்கி முன்னெடுத்தேன்.

சமூகங்களுக்கிடையே பிரிவினைகளை தோற்றுவிக்கும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சக்திகளின் சதிவலைகளிலும் கருத்துக்களிலும் சிக்க மாட்டேன். சகலருக்கும் வெற்றியளிக்கக் கூடிய சமூகத்தை ஏற்படுத்த முனைப்போடும் பொறுப்போடும் செயற்படுவேன்.

மாற்றுச் சக்திகள் எனக் கூறிக் கொண்டு கத்னா, விபச்சாரம் குறித்து முஸ்லிம் சமூகத்தின் அடிப்படை கொள்கைகளுக்கு மாற்றமான விடயங்களை தமது நிலைப்பாடுகளாக எடுத்து வரும் சக்திகளுக்கு நீங்கள் ஏமாந்து போக மாட்டீர்கள் என நான் நம்புகிறேன். ஜனநாயகம், சமூக நீதி, வேற்றுமையில் ஒற்றுமை என்ற அத்திவாரத்தில் இந்நாட்டை கட்டியெழுப்புவதே எமது பிரதான நோக்கமாகும்.

இலங்கை தீபத்தில் நாமனைவரும் ஐக்கியத்துடன் பரஸ்பர புரிந்துணர்வோடும் வாழ்வதற்கு சகலருக்கும் உரிமையுண்டு. அந்த உரிமையை நான் பாதுகாப்பேன்.

எனவே, இந்தத்தேர்தலில் எனது வெற்றிக்கு உங்கள் ஒத்துழைப்பினையும் ஆதரவினையும் வேண்டி நிற்கின்றேன். இந்த தேசத்தை கட்டியெழுப்ப என்னோடு அணிதிரளுங்கள் என அன்பாய் வேண்டுகிறேன்.

இப்படிக்கு,

சஜித் பிரேமதாச

Related posts

வடமராட்சி வல்லிபுரம் ஆழயவார் ஆலய சமுத்திர தீத்த  உற்சவம் 

User1

ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் இருந்து கடன் பெற அனுமதி !

User1

இன்று முதல் விசேட போக்குவரத்து சேவை !

User1

Leave a Comment