27.9 C
Jaffna
September 16, 2024
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

யாழில் தன்னை கருணை கொலை செய்யுமாறு முதியவர் ஒருவர் கோரிக்கை

யாழ். (Jaffna) மானிப்பாய் பகுதியில் எந்தவொரு முதியோர் இல்லத்தாலும் பொறுப்பேற்கப்படாத நிலையில் உள்ள என்னை குறைந்த பட்சம் கருணை கொலையாவது செய்ய வேண்டும் என்று முதியவர் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இளையதம்பி ஜெயக்குமார் எனப்படும் குறித்த முதியவர் தற்போது, மானிப்பாய் வீதியில் உள்ள உதயதாரகை சன சமூக நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளார்.

ஒரு காலில்லாத நிலையில் உள்ள அவரைப் பொறுப்பேற்பதற்கு எந்தவொரு முதியோர் இல்லங்களும் இதுவரை முன் வந்திருக்கவில்லை. 

இந்நிலையில், கிராம மக்கள் ஒன்றிணைந்து கிராம அலுவலருக்கு எழுதிய கடிதத்தின் விளைவாகவும், தொடர் நடவடிக்கைகள் காரணமாகவும் அந்த முதியவரை, பொருத்தமான முதியோர் இல்லத்தில் சேர்க்கவேண்டும் என்று ஜே/88 கிராம அலுவலர் பிரிவின் கிராம அலுவலர் சிபாரிசு செய்திருந்தார்.

எனினும், எந்தவொரு முதியோர் இல்லமும் அவரைப் பொறுப்பேற்க முன்வராததைத் தொடர்ந்து, இந்த விடயம் தொடர்பில் யாழ்ப்பாணம் பிரதேச செயலர் எஸ்.சுதர்சனின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இதற்கமைய, அவர் பளையில் உள்ள முதியோர் இல்லம் ஒன்றில் அந்த முதியவரை இணைத்துக் கொள்ளுமாறு கடிதம் வழங்கியுள்ளார்.

இந்நிலையில், நீண்ட நாட்களாக அல்லலுற்றுக் கொண்டிருந்த முதியவருக்கு தங்க ஓரிடம் கிடைத்தமையே போதும் என்ற நிலையில், கிராம மக்கள் இணைந்து பெரும் நிதிச் செலவில் அந்த முதியவரை பளையிலுள்ள மேற்படி முதியோர் இல்லத்துக்குக் கொண்டுசென்றுள்ளனர்.

எனினும், அங்கும் அவருக்கு இடம் வழங்கப்படாததை அடுத்து, அவர் மீண்டும் உதய தாரகை சனசமூக நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளார்.

இதையடுத்தே அவர், எந்தவொரு முதியோர் இல்லமோ, அமைப்போ அல்லது நிறுவனமோ பொறுப்பேற்காத பட்சத்தில் குறைந்தபட்சம் தன்னைக் கருணைக் கொலையாவது செய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், தனது கடிதத்தின் பிரதிகளை அவர், வடக்கு மாகாண ஆளுநர், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் மற்றும் கொட்டடி கிராம அலுவலர் ஆகியோருக்கு அனுப்பியும் வைத்துள்ளார்.

Related posts

கோழி வளர்ப்பில் தகராறு கொலையில் முடிந்தது

sumi

சுதந்திர தின எதிர்ப்பு போராட்டம் – ஐவருக்குத் தடை.!

sumi

கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

User1

Leave a Comment