தமிழரசு கட்சியினால் நேற்றையதினம் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்திற்கு தனக்கு எந்த விதமான அழைப்புகளோ, கடிதங்களோ வழங்கப்படவில்லை என இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம், இலங்கை தமிழரசுக் கட்சி நிறைவேற்றிய தீர்மானம் குறித்து அவரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வினவியவேளை அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் இது குறித்த அவர் மேலும் தெரிவிக்கையில்,
கூட்டம் இருப்பதாக எனக்கு அறிவித்தல் வழங்கப்படாமையினால் கூட்டம் இருக்கு என்ற விடயமே எனக்கு தெரியாது. ஆகையால் எனக்கு குறித்த கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும், கட்சியின் நடவடிக்கைகள் தொடர்பான அனைத்து கடிதங்களும் எனக்கு வழமையாக கிடைக்கின்றது ஆனால் இந்த கூட்டம் தொடர்பான கடிதம் கிடைக்கவில்லை என்ற விடயத்தை கட்சியின் தலைவருக்கும், செயலாளருக்கும் தெரியப்படுத்தியுள்ளேன்.
எடுக்கப்பட்ட முடிவுகள் கூட எவையும் எனக்கு அறிவிக்கப்படவில்லை. மத்தியகுழு கூடியமை, குறித்த கூட்டத்தில் சஜித்துக்கு ஆதரவு தெரிவிப்பதாக ஒரு முடிவு எடுக்கப்பட்டமை போன்ற விடயங்களை ஊடகங்கள் வாயிலாகவே தெரிந்து கொண்டேன்.
தமிழரசு கட்சியை பாதுகாக்க வேண்டியது எமது கடமை. ஏனெனில் நாங்கள் அந்த கட்சியை வளர்த்த பரம்பரையை சேர்ந்தவர்கள் நாங்கள். ஆகையால் அந்தக் கட்சியை அழிவுப்பாதையில் இருந்து மீட்பதற்கு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அந்த நடவடிக்கைகளை எடுப்போம்.
இந்தத் தீர்மானத்திற்கு கட்சியின் தலைவரும் மறுப்பு தெரிவித்திருக்கின்றார். ஆகவே அவர்கள் என்ன முடிவு எடுக்கின்றார்கள் என பொறுத்திருந்து பார்ப்போம். கட்சியானது குறித்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்த முயலுமானால் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை அந்த நேரத்திலேயே தீர்மானிப்போம் என அவர் மேலும் தெரிவித்தார்.