தென் ஆபிரிக்காவுக்கு கிரிக்கெட் விஜயம் செய்துள்ள இலங்கை ஏ அணி தனது ஆரம்பப் போட்டியில் இலகுவாக வெற்றிபெற்றது.
பொச்சேஸ்ட்ரூம் சென்வெஸ் பார்க் விளையாடரங்கில் சனிக்கிழமை (31) நடைபெற்ற தென் ஆபிரிக்க ஏ அணிக்கு எதிரான முதலாவது உத்தியோகப்பற்றற்ற சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை ஏ அணி 93 ஓட்டங்களால் இலகுவாக வெற்றிபெற்றது.
நுவனிது பெர்னாண்டோ, கமில் மிஷார, சமிந்து விக்ரமசிங்க ஆகியோர் குவித்த அரைச் சதங்களும் துஷான் ஹேமன்த, சஹான் ஆராச்சிகே ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சகளும் இலங்கை ஏ அணிக்கு வெற்றியை ஈட்டிக்கொடுத்தன.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை ஏ அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 298 ஓட்டங்களைக் குவித்தது.
ஆரம்ப வீரர் லஹிரு உதார 5 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தது இலங்கை ஏ அணிக்கு நெருக்கடியைக் கொடுத்தது.
ஆனால் கமில் மிஷார, நுவனிது பெர்னாண்டோ ஆகிய இருவரும் மிகச் சிறப்பாக துடுப்பெடுத்தாடி அரைச் சதங்களைப் பெற்றதுடன் 2ஆவது விக்கெட்டில் 101 ஓட்டங்ளைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர்.
கமில் மிஷார 71 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்த பின்னர் நுவனிது பெர்னாண்டோ மேலும் 52 ஓட்டங்களை 3ஆவது விக்கெட்டில் சஹான் ஆராச்சிகேவுடன் பகிர்ந்தார்.
சஹான் ஆராச்சிகே 15 ஓட்டங்களை மாத்திரம் பெற்றார்.
மறுபக்கத்தில் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய நுவனிது பெர்னாண்டோ துரதிர்ஷ்டவசமாக 97 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.
மத்திய வரிசையில் சமிந்து விக்ரமசிங்க அதிரடியாக 39 பந்துகளில் 4 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 55 ஓட்டங்களை விளாசினார்.
பந்துவீச்சில் அண்டைல் பெலுக்வாயோ 38 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ட்ரைஸ்டன் லுஸ் 38 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்க ஏ அணி 36.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 205 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.
தென் ஆபிரிக்க ஏ அணி சார்பாக டோனி டி ஸோர்ஸி (53), டிவோல்ட் ப்ரெவிஸ் (39), ஈதன் பொஷ் (32 ஆ.இ.) ஆகிய மூவரே 30 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.
பந்துவீச்சில் துஷான் ஹேமன்த 34 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் வனுஜ சஹான் 41 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
ஆட்டநாயகன்: நுவனிது பெர்னாண்டோ