அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்க ஊழியர் சம்பள அதிகரிப்பு முன்மொழிவு சர்வதேச நாணய நிதியத்தின் விதிமுறைகளின் அடிப்படையில் மூன்று ஆண்டுகளுக்கு மாற்றமில்லாமல் இருக்கும் என வெகுசன ஊடகத் துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
எந்த அரசாங்கமாக இருந்தாலும் சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகளின் அடிப்படையிலான கருத்து நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
வரவு செலவுத் திட்டத்தில் இந்த சம்பள அதிகரிப்பு முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மற்றும் அது அமைச்சரவையின் ஒப்புதலையும் பெற்றுள்ளதென்றும் அவர் குறிப்பிட்டார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல மேலும் தெரிவிக்கையில்,
சமூகத்தில் தவறாக சித்தரிக்கப்படுமாயின் அதனைத் திருத்த வேண்டிய கடமையும் பொறுப்பும் அமைச்சரவைப் பேச்சாளர் என்ற வகையில் எனக்கு உண்டு.
அமைச்சரவைப் பத்திரங்கள் இரகசியமானவை. அவை வெளியே கொண்டுசெல்லப்படுவதில்லை. அவற்றின் பிரதிகள் அமைச்சின் செயலாளர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
நான் அமைச்சரவை பேச்சாளராக பணியாற்றுகிறேன். அந்தச் செயற்பாடுகளில் ஊடகவியலாளர்களும் பொறுப்புடன் செயற்பட்டனர். என்னால் தெரிவிக்கப்பட்ட செய்தி அரசியலமைப்பின்படி சிங்கள மற்றும் தமிழ் ஊடகங்களில் வெளிவருகின்றன.
அவை ஊடக நிறுவனங்களுக்கும் அனுப்பப்படுகிறன. அவை கலாநிதி பந்துல குணவர்தனவின் அறிக்கைகள் அல்ல. அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவுகளையே நான் அறிவிப்பேன் என குறிப்பிட்டுள்ளார்
இதேவேளை, இந்த முடிவுகளை நான் தெரிவித்த பிறகு, ஊடக நிறுவனங்கள் அதில் ஒரு பகுதியை மட்டுமே சமுகமயமாக்கியுள்ளன. அங்கு பலர் அடிப்படை சம்பளம் பற்றி குறிப்பிடாமல் ரூ.25,000 உயர்வு பற்றி மட்டுமே குறிப்பிட்டுள்ளனர்.
ஆட்சி செய்வதும் அரசியல் செய்வதும் இரண்டு. தற்போது நிதி அமைச்சு வரவு செலவு திட்டத்தை தயாரித்து வருகிறது. அதில் உள்ளடக்குவதற்கு அமைச்சரவை அறிவிப்பு சரியாக இருக்க வேண்டும்.
அனைத்து அரச ஊழியர்களுக்கும் மூன்று வருடங்களுக்கு 25,000 ரூபா கொடுப்பனவு திருத்தம் இன்றி வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.