பொருளாதார மீட்சிக்கு மத்தியில் அரச மற்றும் தனியார் துறை சேவையாளர்களின் சம்பள அதிகரிப்புக்கு இயலுமை காணப்படுகிறது எனத் தெரிவித்துள்ள இலங்கை மத்திய வங்கி, தற்போதைய வாழ்க்கைச் செலவுக்கு அமைய ஊழியர் படையின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்று வரும் ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டு முதலிரு காலாண்டுகளில் பொருளாதார வளர்ச்சி சாதகமான நிலையில் உள்ளதாகவும் 2025 ஆம் ஆண்டு முதல் காலாண்டு வரை முதன்மை பணவீக்கம் குறைவானதாக பேணப்படும் என்றும் இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
நாணயக்கொள்கை (2024 ஆகஸ்ட்) அறிக்கையில் நெகிழ்ச்சித்தன்மை வாய்ந்த பணவீக்க இலக்கிடல் கட்டமைப்பின் கீழான பணவீக்க இலக்கு தொடர்பான சிறப்புக் குறிப்பு உள்ளடக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவிக்கின்றது.
அரசியல் ரீதியான நிச்சயமற்ற தன்மை பொருளாதார மீட்சியின் மீதான பாதகமான தாக்கங்களை ஏற்படுத்தும் அதேவேளை, திறமைசாலிகளின் உயர்ந்தளவான வெளியேற்றமானது தொழிலாளர் பற்றாக்குறைகளுக்கும், குறைந்த உற்பத்தித் திறனுக்கும் வழிவகுக்கும் இது பொருளாதார வளர்ச்சித் தோற்றப்பாட்டிற்கான இடர்நேர்வாக அமையும் என்றும் இலங்கை மத்திய வங்கி கூறுகின்றது.
2025 ஆம் ஆண்டு இரண்டாம் காலாண்டில் உயர்வடைந்துள்ள பணவீக்கத்தை 5 வீதம் நிலையாக உறுதிப்படுத்த எதிர்பார்ப்புள்ளதாகவும் இலங்கை மத்திய வங்கி தெரிவிக்கின்றது.
பொருளாதார மீட்சிக்கு மத்தியில் அரச மற்றும் தனியார் துறை சேவையாளர்களின் சம்பள அதிகரிப்புக்கு இயலுமை காணப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ள இலங்கை மத்திய வங்கி, தற்போதைய வாழ்க்கைச் செலவுக்கு அமைய ஊழியர்படையின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
வாழ்க்கை செலவு உயர்வுக்கும், ஊழியர்களின் சம்பள வீதத்துக்கும் இடையில் நீண்ட இடைவெளி காணப்படுவதாகவும் சம்பள அதிகரிப்பு நாணய கொள்கை செயற்திட்டத்துக்கு பாதகமானதாக இருக்காது என்றும் இலங்கை மத்திய வங்கி உறுதியளித்துள்ளது.
இதேவேளை, ஆட்சி மாற்றத்துக்கேற்ப பொருளாதாரக் கொள்கைகளை இனி மாற்றியமைக்க முடியாது எனவும் இலங்கை மத்திய வங்கி வலியுறுத்தியுள்ளது.