சிங்கப்பூர் பொலிஸ் பயன்படுத்தும் தந்திரோபாயங்கள் மற்றும் உபகரணங்களை, இலங்கையின் சிறப்பு அதிரடிப் படை (STF) பயன்படுத்தும் என்று சிங்கப்பூர் சட்ட அமைச்சர் காசி விஸ்வநாதன் சண்முகம் கொழும்பில் (Colombo) வைத்து தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பொது பாதுகாப்பு, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் திரான் அலஸ், 2022 அக்டோபரில் சிங்கப்பூர் சென்றிருந்தபோது, சிங்கப்பூர் பொலிஸாரின் நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டியதாகவும் சண்முகம் கூறியுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற விசேட அதிரடிப்படையின் கட்டளைக் கட்டிடத் திறப்பு விழாவில் கலந்து கொண்ட சிங்கப்பூர் அமைச்சர் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.
சிங்கப்பூர் பொலிஸ் படையின் சில அம்சங்களில் இலங்கை ஆர்வமாக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
இலங்கையின் சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் சிங்கப்பூர் பொலிஸார் குறிப்புகள் மற்றும் அனுபவங்களை பரிமாறிக்கொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிங்கப்பூரின் சிறப்பு நடவடிக்கைக் கட்டளைக்கு ஏற்ப, இலங்கையின் சிறப்பு அதிரடிப்படை நடவடிக்கைக் கட்டளை மையம் ஒரு பகுதியாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூர் எதிர்கொள்ளும் சவால்களை விட இலங்கையின் சவால்கள் அதிகமாக இருப்பதால், சிங்கப்பூர் இலங்கையிடம் இருந்து தமது நாடு நிறைய கற்றுக் கொள்ளவிருப்பதாக சிங்கப்பூர் அமைச்சர் கூறியுள்ளார்.