இனிவருங்காலங்களில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிவில் உடையில் வாகன சோதனையில் ஈடுபட முடியாது என இலங்கை பொலிஸ் அதிகாரிகளுக்கு பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் இன்று இந்த உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நாரம்மலவில் லொறி சாரதி ஒருவர் சிவில் உடையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தரால் சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து இந்த அறிவுறுத்தல்கள் வந்துள்ளன.
மூன்று பிள்ளைகளின் தந்தையான 40 வயதான லொறி சாரதி, சிவில் உடையில் இருந்த நாரம்மல பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
நேரில் பார்த்தவர்களின் கூற்றுப்படி, தம்பெலஸ்ஸ, நாரம்மலையில் உள்ள சோதனைச் சாவடியில் சோதனைக்காக வாகனத்தை நிறுத்த அவர்களின் கட்டளைகளுக்கு செவிசாய்க்கத் தவறியதற்காக சிவில் உடையில் இருந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகள் லொறியைப் பின்தொடர்ந்தனர்.
மோட்டார் சைக்கிளில் லொறியைத் துரத்திச் சென்ற அவர்கள், வாகனத்தை நிறுத்தியுள்ளனர், அதன் பின்னர், சாரதியை நெருங்குவதற்கு முன்னர், சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர் தனது ஆயுதத்தை எடுத்துச் சென்றதாகவும், பின்னர் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், நேரில் பார்த்தவர்கள் மேலும் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சப்-இன்ஸ்பெக்டர் (SI) கைது செய்யப்பட்டு 2024 ஜனவரி 23 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார். இதேவேளை குறித்த அதிகாரிகளின் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
இதேவேளை , பொலிஸ் உத்தியோகத்தரின் துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்த லொறி சாரதியின் உறவினர்களுக்கு ஒரு மில்லியன் ரூபாய் நட்ட ஈட்டை பொலிஸார் வழங்கியுள்ளனர்.
சாரதியின் அலவ்வ பகுதியில் உள்ள வீட்டில் வைத்து பதில் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் இந்தத் தொகையை வழங்கி உள்ளார்.
கடந்த 18 ஆம் திகதி பிற்பகல் நாரம்மல பகுதியில் முன்னெடுக்கப்பட்ட வாகன சோதனை நடவடிக்கையின் போது, பொலிஸாரின் துப்பாக்கிப் வெடித்தில் சாரதி உயிழந்தார்.
மஹரச்சியமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே இந்த சம்பவத்தில் உயிரிழந்தார்.
இதனையடுத்து, சம்பவத்துடன் தொடர்புடைய உதவி பொலிஸ் பரிசோதகர் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகியோர் நேற்று (19) முதல் அமுலுக்கு வரும் வகையில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.