கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கையளிப்பதற்கான நடவடிக்கைகள் விரைவாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும், அதற்கான முழுமையான ஒத்துழைப்பைத் தான் வழங்கத் தயாராக உள்ளார் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் சபையில் உறுதியளித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கரைவலை மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது:-
“யுத்தத்தாலும் தொடர்ச்சியான புறக்கணிப்புகளினாலும் கிளிநொச்சி மாவட்டம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மாவட்டத்தின் சுகாதாரக் கட்டமைப்பு மேம்படுத்தப்பட வேண்டியது அவசியமாகும். எனவே, அடுத்ததாக நடைபெறவுள்ள கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில், கிளிநொச்சி பொது வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டு வருவதற்கான உத்தியோகபூர்வ நடவடிக்கைகளைத் துறைசார்ந்தவர்கள் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.
அவ்வாறு கிளிநொச்சி மாவட்ட மக்களின் நலன் கருதி எடுக்கப்படும் அனைத்து சாதகமான நடவடிக்கைகளுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற ரீதியில் எனது முழுமையான ஆதரவையும், பங்களிப்பையும் நான் வழங்குவேன்.
கிளிநொச்சி மாவட்ட மக்கள் பல்வேறு வழிகளில் இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
எனக்குச் சில்லறைத்தனமான அரசியல் செய்ய வேண்டிய தேவை இல்லை. நாடாளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ மற்றும் ரோஹித்த அபேகுணவர்தன ஆகியோருடன் ஒன்றிணைந்து நான் ஒரே மேடையில் ஏறிய போதும் இதனையே கதைத்தேன். இனியும் தொடர்ந்து பேசுவேன். என்னிடம் எவ்வித குறுகிய அரசியல் நோக்கமும் கிடையாது.” – என்றார்.










