நாடு பூராகவும் அரசுக்கு எதிரான கூட்டங்களை நடத்தி, மக்களை அணிதிரட்டி தற்போதைய அரசை விரைவில் வீட்டுக்கு அனுப்ப நடவடிக்கை எடுப்போம் என்று முன்னாள் அமைச்சரும் எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
“ஊழலை ஒழிப்பதாகக் கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசு, ஊழலையே முன்னிலைப்படுத்திச் செயற்படுகின்றது. ஆட்சிக்கு வந்து சில மாதங்களில் எவ்வித பரிசோதனைகளுமின்றி விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்கள் தொடர்பில் இதுவரையில் உண்மை வெளிப்படுத்தப்படவில்லை. சுங்கச் சட்டத்தை மீறி விடுவிக்கப்பட்ட இந்தக் கொள்கலன்கள் குறித்து இந்த அரசில் இருப்பவர்கள் ஒரு காலத்தில் பதில் சொல்லியே ஆக வேண்டும்.
மறுபுறம், ஒருசில பௌத்த பிக்குகளின் முறையற்ற செயற்பாடுகளை முன்னிலைப்படுத்தி, ஒட்டுமொத்த புத்த சாசனத்தையும் மலினப்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
புத்தசாசனத்தை இல்லாதொழித்து இலங்கையை மதசார்பற்ற நாடாக மாற்றும் செயற்பாடுகளுக்கே அரசு முன்னுரிமையளித்துள்ளது.
இலங்கையின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களை பறைசாற்றும் வரலாற்று விடயங்கள் பாடப்புத்தகங்களில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளன.
அதேபோல், இந்தியாவுடன் அரசு செய்துகொண்ட பாதுகாப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இதுவரையில் நாடாளுமன்றத்துக்குக்கூட வெளிப்படுத்தப்படவில்லை. நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பில் அரசு தன்னிச்சையான முடிவுகளையே எடுக்கிறது.
மேலும், உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ள சுரேஷ் சலேயை, நீதிமன்றத்தால் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்டவரைப் போன்று குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நடத்தி வருகின்றனர்.
மத்திய கிழக்கு யுத்தத்தைக் காரணம் காட்டி எரிபொருட்களின் விலையை அரசு பாரியளவில் அதிகரித்திருக்கின்றது. அதிக விலைக்கு எரிபொருட்களைக் கொள்வனவு செய்துவிட்டு, அதன் நட்டத்தை மக்கள் மீது சுமத்தியுள்ளார்கள். சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் அடுத்த மாதத்துடன் முடிவடையவுள்ள நிலையில், அதன் பின்னர் மின்கட்டணமும், எரிபொருட்களின் விலையும் மீண்டும் அதிகரிக்கப்படும் அபாயம் காணப்படுகின்றது.
சுனாமி அனர்த்தம் ஏற்பட்டபோது பாதிக்கப்பட்ட மக்களை 56 நாட்களில் நாம் மீளக் கட்டியெழுப்பினோம். ஆனால் டித்வா அனர்த்தம் ஏற்பட்டு 7 மாதங்களாகியும் ஆயிரக்கணக்கான மக்கள் இன்னும் வாடகை வீடுகளிலேயே வாழ்ந்து வருகின்றார்கள்.
இவ்வாறு இந்த அரசு தான் கூறிய எதனையும் செய்ய முடியாமல் போயிருக்கின்றது. அதனால்தான், கூட்டு எதிர்க்கட்சியின் எதிர்ப்புக் கூட்டங்களை நாம் நடத்தி வருகின்றோம்.
நாடு தழுவிய ரீதியில் மக்களை அணிதிரட்டி இந்த அரசை விரட்டியடிப்போம்.” – என்றார்.










