குருநாகல் – புத்தளம் வீதியின் ஹேரத்கம சந்திக்கு அருகில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விபத்தில் 40 வயதுடைய தந்தை ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தில் அவுலேகம பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவர் தனது 5 வயதுக் குழந்தையைக் கையில் ஏந்தியவாறு வீதியைக் கடக்க முயன்ற போது, புத்தளம் திசை நோக்கி அதிவேகமாகப் பயணித்த பேருந்து அவர்கள் மீது மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த தந்தையும் குழந்தையும் உடனடியாக மீட்கப்பட்டு நிக்கவெரட்டிய விபத்துச் சேவைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். எனினும், அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த தந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, படுகாயமடைந்த 5 வயது குழந்தை மேலதிக அவசர சிகிச்சைக்காகக் குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, அங்கு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்துடன் தொடர்புடைய பேருந்தின் சாரதி வாரியபொல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
விபத்துக்கான காரணம் குறித்துப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.










