முல்லைத்தீவு – குருந்தூர்மலையில் வரலாற்று ரீதியாகச் சைவக் கோயில் ஒன்று இருந்ததற்கான எவ்வித சான்றுகளும் இல்லை எனத் தொல்லியல் திணைக்களம், புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகாரங்கள் அமைச்சின் செயலாளருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளது.
அத்துடன், குறித்த நிலப்பரப்பானது வரலாற்றுச் சிறப்புமிக்க பௌத்த மதத் தலத்துக்கான சான்றுகளைக் கொண்ட இடம் எனவும், அங்கு பௌத்த எச்சங்களைச் சேதமாக்கி புதிய வழிபாட்டுத் தலங்களை உருவாக்க முயற்சிப்பது தண்டனைக்குரிய குற்றம் என்றும் அக் கடிதத்தில் தொல்லியல் திணைக்களம் பதிவு செய்துள்ளது.
எனினும், குருந்தூர்மலை என்பது தமிழர்களின் பூர்வீக நிலப்பரப்பு என்றும், அங்குள்ள ஆதி ஐயனார் மற்றும் சிவன் ஆலயங்களை அப்பகுதி மக்கள் பாரம்பரியமாக வழிபட்டு வந்தனர் என்றும் வரலாற்று ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அங்குள்ள வரலாற்றுச் சிதைவுகள் மற்றும் தமிழ் வரிவடிவ எழுத்துக்களைக் கொண்டு, குறித்த நிலம் கி.மு. 3 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட 2,300 ஆண்டுகாலம் பழமையானது எனப் பேராசிரியர் பத்மநாதன் உள்ளிட்ட வரலாற்றுத்துறை நிபுணர்கள் பதிவு செய்துள்ளனர்.
மேலும், அங்கு கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கத்தை ஒத்த உருவம் பல்லவர் காலத்து ‘எட்டுமுக தாரலிங்கம்’ என வரலாற்று ஆய்வாளர் என்.கே.எஸ். திருச்செல்வம் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஆங்கிலேய ஆய்வாளர்களின் பதிவுகளிலும் குருந்தூர் மலையில் ஆவுடையார் (லிங்கத்தின் அடிப்பாகம்), உடைந்த நந்தி சிலை, பழங்காலக் கிணறு என்பன இருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதுமட்டுமன்றி, வீரசைவத்தை வழிபட்ட கலிங்க மாகோன் மன்னனின் ஆட்சிக் காலத்தில் குருந்தூர் மலை ஒரு படைத்தளமாக இருந்ததாகவும், அங்கு சிவன் கோவில் இருந்திருக்க வேண்டும் என்றும் மகாவம்சத்தின் ஒரு பகுதியான சூளவம்சம் குறிப்பிடுவதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இவ்வாறான பின்னணியில், கடந்த 2018 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இப்பகுதிக்குள் நுழைந்த கல்கமூவ சாந்தபோதி தேரர், 2020 ஆம் ஆண்டு முதல் நீதிமன்றக் கட்டளைகளை மீறி, இராணுவத்தின் துணையுடன் சட்டவிரோதமாகக் ‘குருந்தி ராஜமஹா விகாரை’ என்ற பௌத்த விகாரையை அங்கு நிர்மாணித்துள்ளதாகத் தமிழ்த் தரப்பினர் குற்றம் சாட்டுகின்றனர்.
அத்துடன், விகாரையைச் சூழவுள்ள தமிழ் மக்களுக்குச் சொந்தமான 229 ஏக்கர் வளமான விவசாய நிலங்களும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிண்றது.
இவ்விவகாரத்தில் ஏற்பட்ட அரசியல் அழுத்தங்கள், மரண அச்சுறுத்தல்கள் மற்றும் இராணுவப் புலனாய்வுத்துறையினரின் தீவிர கண்காணிப்பு காரணமாகவே முல்லைத்தீவு மாவட்ட முன்னாள் நீதிபதி ரி. சரவணராஜா தனது பதவியைத் துறந்து நாட்டை விட்டே வெளியேறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அண்மையில், தமது சொந்த நிலத்தில் விவசாயம் செய்ய முயன்ற தமிழ் பொதுமக்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சம்பவமும் இங்கு அரங்கேறியிருந்தது.
வெடுக்குநாறி மலையைப் பௌத்த மத நிலமாக வர்த்தமானி மூலம் அரசு அறிவித்துள்ள தொடர்ச்சியிலேயே, தற்போது தொல்லியல் திணைக்களத்தின் ஊடாகக் குருந்தூர்மலையையும் முழுமையான பௌத்த நிலமாக அடையாளப்படுத்த முயற்சிகள் நடப்பதாகத் தமிழ் அரசியல் பிரதிநிதிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
பலாலி விமான நிலையத்தில் நடராஜர் சிலை வைப்பது இன நல்லிணக்கத்துக்குப் பாதிப்பு எனக் கூறும் தற்போதைய அரசு, தொல்லியல் திணைக்களத்தை முன்னிறுத்திச் சைவ ஆலயங்களின் வரலாற்றுத் தொன்மையை மூடிமறைக்கப் பார்ப்பதாகப் பாரிய விமர்சனங்கள் எழுந்துள்ளன.










