உயர்நீதிமன்றத்தில் நீண்டகாலமாக நிலவி வரும் நீதியரசர்களின் வெற்றிடங்களை உடனடியாக நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட விசேட கடிதமொன்று இன்று சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவிடம் கையளிக்கப்பட்டது.
அரசமைப்புப் பேரவையின் தலைவர் என்ற ரீதியில், இந்த விவகாரம் குறித்து ஜனாதிபதிக்குத் தெளிவுபடுத்தி, நீதியரசர்களின் வெற்றிடங்களை விரைவாக நிரப்புவதற்குரிய தகுந்த நடவடிக்கைகளை எடுக்குமாறு சபாநாயகரிடம் இந்தக் கடிதத்தின் மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றச் சபாநாயகர் என்ற முறையில் அரசமைப்பு விதிகளின்படி நேர்மையாகச் செயற்பட்டு, மக்களின் இறையாண்மையின் முக்கிய அங்கமாக விளங்கும் நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கைகளைச் சபாநாயகர் முன்னெடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
உயர்நீதிமன்றத்தில் நீதியரசர்களின் பற்றாக்குறை நிலவுவதால் ஆயிரக்கணக்கான வழக்கு விசாரணைகள் தேங்கிக் கிடப்பதுடன், பொதுமக்களுக்கான நீதி வழங்கல் செயற்பாடு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது என்றும், இந்த நிலையைத் தற்போதைய அரசு உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் இந்தக் கடிதத்தின் மூலம் மேலும் வலியுறுத்தியுள்ளன.










