“நிறைவேற்றுத்துறை மற்றும் சட்டவாக்கத்துறையின் ஆதிக்கத்திலிருந்து நீதித்துறை சுயாதீனமாக இயங்குவதே ஜனநாயகத்தின் அடிப்படை. நீதிமன்றச் சுதந்திரத்தில் கைவைத்தால், கோட்டாபய ராஜபக்ஷவுக்கு நேர்ந்த கதியே இந்த அரசுக்கும் ஏற்படும்” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பில் நேற்றுப் புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், “நீதிமன்ற நடவடிக்கைகளுக்குப் பாதிப்பு ஏற்படும் வகையில் அரசு திட்டமிட்ட பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகின்றது.
வழங்கப்படவிருக்கும் தீர்ப்புகளின் இறுதி முடிவுகள் குறித்து ஜனாதிபதி முன்கூட்டியே கூறி வருகின்றார். அதேபோல், மூன்று நீதிபதிகளைக் கொண்ட நிலக்கரி ஆணைக்குழு வழங்கவுள்ள தீர்ப்பை, ஜே.வி.பி. செயலாளர் ரில்வின் சில்வா காலக்கெடுவுடன் பிரகடனப்படுத்துகின்றார்.
மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைக் கொண்டு அனைத்தையும் செய்துவிடலாம் என்று நினைப்பது வரலாற்றுத் தவறாகும். கோட்டாபய ராஜபக்ஷவிடமும் அந்தப் பெரும்பான்மை இருந்தது, ஆனால் இறுதியில் அவரால் இந்த நாட்டில் வாழ முடியாமல் போனதை மறந்துவிடக் கூடாது.
நீதிமன்றச் சுதந்திரம் குறித்து நாடாளுமன்றத்தில் சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தைக் கோரியபோது, அரசு தனது பெரும்பான்மை பலத்தைப் பயன்படுத்தி அதனை நிராகரித்துள்ளது.
மே முதலாம் திகதி நீதிபதிகளின் கண்ணியத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்திவிட்டு, ஜனாதிபதி தற்போது சட்டத்தின் சமத்துவம் பற்றிப் பேசுகின்றார். நாட்டு மக்கள் ஒன்றும் தெரியாத ஏமாளிகள் அல்லர். எனவே, ஜனாதிபதி நாட்டு மக்களுக்குப் போலியான உபதேசங்களை வழங்க வேண்டாம்.” – என்று அஜித் பி. பெரேரா கேட்டுக்கொண்டார்.
மக்களின் கௌரவத்தையும் நீதிமன்றச் சுதந்திரத்தையும் பாதுகாக்கத் தவறும் இந்த அரசுக்கு எதிராக, எதிர்க்கட்சியாக நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் உறுதியுடன் களமிறங்குவோம் என்றும் அவர் இதன்போது சூளுரைத்தார்.










