“மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் அடங்கும் நல்லூர் கிராம சேவகர் பிரிவில் உள்ள மலைமுந்தல் எனும் இடத்தில் வாழும் மக்களுக்குச் சொந்தமான உறுதிக் காணிகளை சுற்றி வனத்துறை போட்ட எல்லைக் கற்களை அகற்றுவதாக வனத்துறை மூதூர் பிரதேச செயலாளருக்கு எழுத்து மூலம் ஒப்புதல் அளித்துள்ள போதும் இதுவரை எல்லைக் கற்களை அகற்றவில்லை.
அதனை விரைந்து அகற்ற ஆவன செய்ய வேண்டும்” என இலங்கை தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் தெரிவித்தார்.
மூதூர் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (16) மாலை இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு தனது பிரேரணைகளை முன்வைத்து உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,”மூதூர் பிரதேச சபையானது சேகரிக்கின்ற குப்பைகளை கொட்டுவதற்கான இடம் இல்லாமல் இன்னல் படுகின்றது. இந்தச் சிக்கலைத் தீர்க்க குப்பை கொட்டுவதற்குப் பொருத்தமான இடம் ஒன்றை வழங்க ஆவன செய்ய வேண்டும்.
கிளிவெட்டி கிராம இந்து மயானத்தினை ஒரு சிலர் அத்துமீறி பிடித்து வருவதனால் அதனை அளவீடு செய்து எல்லைப்படுத்த ஆவன செய்தல்.
சேனையூர் கிராம சேவகர் பிரிவில் அடங்கும் சீதனவெளி கிராமத்திற்கு குழாய் நீர் விநியோக வேலை மந்தகதியில் உள்ளது. அதனைத் துரிதப்படுத்த ஆவன செய்ய வேண்டும்.
கட்டை பறிச்சான் பாலத்தில் இருந்து கெவிலியா நோக்கி செல்லும் RDD க்குச் சொந்தமான வீதி நீண்டகாலமாக பராமரிப்பு இன்றி உள்ளது. அதனை மறுசீரமைக்க ஆவன செய்தல் .
மூதூர் கிழக்கு பிரதேசத்தில் உள்ள வயற்காணிகளுக்குள் இருக்கும் அல்லது அருகிலுள்ள மலைகளை பாரிய வெடி வைத்துத் தகர்த்தலை நிறுத்துதல்.
சம்பூர் – திருகோணமலை போக்குவரத்திற்காக மேலும் ஒரு பேருந்து சேவை நடத்த ஆவன செய்ய வேண்டும்.
மணற்சேனை கிராமிய வைத்தியசாலையினை மேம்படுத்தி வினைத்திறனுடன் இயங்க வைத்தல்.
கங்குவேலி கிராம சேவையாளர் பிரிவில் வசிக்கும் 35 குடும்பங்கள் குடிநீர் இன்றி இன்னல் படுகின்றனர். இவர்களுக்குத் தேவையான பிரதான குடிநீர்க் குழாய் இணைப்பை வழங்க ஆவன செய்ய வேண்டும்.
கிளிவெட்டி கிராம சேவகர் பிரிவில் அடங்கும் கிரான் குளத்தினை ஒரு சிலர் அத்துமீறி பிடித்து வருவதனால் அதனை அளவீடு செய்து எல்லைப்படுத்த ஆவன செய்தல்.
மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சம்பூர் கிராமத்தில் மீன்பிடித்துறை நிறுவ ஆவன செய்ய வேண்டும்.
3.5 கிலோ மீற்றர் நீளமான நீர்ப்பாசன திணைக்களத்திற்குச் சொந்தமான கிரான்குளம் (கிளிவெட்டி – இலிங்கபுரம்) விவசாய வீதியானது நீண்ட காலமாக பராமரிப்பு இன்றி மறுசீரமைக்கப்படாமையினால் அதனைப் பயன்படுத்துகின்ற விவசாயிகள் அதிக சிரமத்துக்குள்ளாகின்றனர். இதனை விரைந்து மறுசீரமைக்க ஆவன செய்ய வேண்டும்.
மேற்குறிப்பிட்ட முன்மொழிவுகளுக்கான சாத்தியமான தீர்வுகள் 2025.08.13 ஆம் திகதி நடைபெறவுள்ள அடுத்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திற்கு முன்பு வழங்க வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டது” என மேலும் தெரிவித்தார்.











