இன்று கரும்புலிகள் நாள். அடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்களை நினைவேந்தும் நாள்.
தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில், 1987ஆம் ஆண்டு ஜூலை மாதம் 5ஆம் திகதி கரும்புலி கேப்டன் மில்லரின் தாக்குதலுடன் கரும்புலிகள் சகாப்தம் தொடங்கி வைக்கப்பட்டது.
யாழ். வடமராட்சி நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில் நிலைகொண்டிருந்த இராணுவத்தினர் மீது மில்லர் கரும்புலித் தாக்குதல் நடத்தி இன்று 36 ஆண்டுகள் கடந்துவிட்டன.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஒவ்வொரு திருப்புமுனைகளிலும் கரும்புலிகளின் நாமம் உள்ளது. அந்தவகையில் கடலிலும் எதிரிக்குத் தக்க பாடத்தை கொடுத்தார்கள் கடற்கரும்புலிகள்.
இவ்வாறு விடுதலைப் போரின் போராட்டப் பாதைகளில் தடைநீக்கிகளாக கரும்புலிகள் காணப்பட்டார்கள்.
2000ஆம் ஆண்டு கட்டுநாயக்கா வான்படைத்தளம் மீது சென்று கரும்புலித் தாக்குதல் நடத்தப்பட்டது.
இவ்வாறு இலங்கையின் தென்பகுதியில் பல நிழற்கரும்புலிகள் தாக்குதல்களை நடத்தி வீர வரலாறானார்கள்.
2007ஆம் ஆண்டு அனுராதபுரம் வான்படைத்தளம் மீது எல்லாளன் நடவடிக்கை எனப் பெயர் சூட்டப்பட்ட கரும்புலித் தாக்குதல், 21 கரும்புலி மறவர்களால் மேற்கொள்ளப்பட்டது.
இந்தத் தாக்குதல் தரையிலும் கடலிலும் நடத்தப்பட்டுக் கொண்டிருந்த அதேவேளை, 2009ஆம் ஆண்டு வான் கரும்புலிகளும் கொழும்பில் தாக்குதலை நடத்தினார்கள்.
இறுதிப் போர் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் மண்ணிலும் எத்தனையோ கரும்புலிகள் வீர வரலாறானார்கள்.
வெளியில் தெரியாத அந்த அற்புத மாமனிதர்களை இன்றைய நாளில் தரணியெங்கும் வாழும் தமிழர்கள் நினைவிற்கொள்கின்றார்கள்.










