இங்கிலாந்துக்கு எதிராக பேர்மிங்ஹாம் எஜ்பெஸ்டன் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணித் தலைவர் ஷுப்மான் கில்லின் சாதனைமிக இரட்டைச் சதத்தின் உதவியுடன் இந்தியா மிகவும் பலம் வாய்ந்த நிலையில் இருக்கிறது
இந்தநிலையில், நேற்று இரண்டாம் நாள் ஆட்டம் முடிவடையும்போது, இங்கிலாந்து அணி தமது முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளை இழந்து 77 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
முன்னதாக, இந்திய அணி தமது முதல் இன்னிங்ஸில் 587 ஓட்டங்களைப் பெற்றது.
இப் போட்டியில் தனது இரண்டாவது டெஸ்ட் இரட்டைச் சதத்தைக் குவித்த ஷுப்மான் கில் 269 ஓட்டங்களைப் பெற்று 8ஆவதாக ஆட்டம் இழந்தார்.
இந்திய அணித் தலைவர் ஒருவர் டெஸ்ட் இன்னிங்ஸ் ஒன்றில் பெற்ற அதிகூடிய எண்ணிக்கை என்ற சாதனையை இதன் மூலம் ஷுப்மான் கில் ஏற்படுத்தினார்.
தென் ஆபிரிக்காவுக்கு எதிராக பூனேயில் 2019இல் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் விராத் கொஹ்லி பெற்ற ஆட்டம் இழக்காத 254 ஓட்டங்களே இந்திய அணித் தலைவர் ஒருவரால் டெஸ்ட் இன்னிங்ஸில் பெறப்பட்ட முந்தைய அதிகூடிய எண்ணிக்கையாக இருந்தது.
கில் பெற்ற 269 ஓட்டங்களானது ஆசியாவுக்கு வெளியே இந்திய துடுப்பாட்ட வீரர் ஒருவர் பெற்ற அதிகூடிய எண்ணிக்கையாகவும் பதிவானது.
அவுஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் 2004ஆம் ஆண்டு சச்சின் டெண்டுல்கர் பெற்ற ஆட்டம் இழக்காத 241 ஓட்டங்களே ஆசியாவுக்கு வெளியே இந்தியர் ஒருவர் பெற்ற இதற்கு முந்தைய சாதனையாக இருந்தது.










