கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் ஹட்டன் அரச மற்றும் தனியார் பேருந்து நிலையங்களில் எங்கும் கழிவுநீர் தேங்கி நிற்கும் நிலை காணப்படுகின்றது.
இதனால் பேருந்து சாரதிகள், நடத்துநர்கள், பயணிகள், பாடசாலை மாணவர்கள், நகரவாசிகள் ஆகியோர் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகி வருவதாக புகார் தெரிவித்துள்ளனர்.
பேருந்து நிலையத்திற்கு நுழையும் போது பாரிய கழிவு நீர் நிற்கும் குழிகளில் உள்ள நீர் பாடசாலை மாணவர்கள் மற்றும் பயணிகள் மீது சீரியடிக்கும் நிலை காணப்படுகின்றது.
அத்துடன் பேருந்து நிலையத்தில் உள்ள கழிப்பறை பாவனைக்கு உதவாத நிலையில் உள்ளது. அங்கு செல்லும் பயணிகளிடம் அதிகளவு கட்டணமாக 40/= ரூபாய் அறவிடப்படுகின்றது. அதற்கு பற்றுச்சீட்டு வழங்குவதும் இல்லை. இது தொடர்பாக ஹட்டன் நகர சபை கண்டுகொள்வது கிடையாது.
நாளாந்தம் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் இந்தப் பேருந்து நிலையம் பாவனைக்கு உதவாத நிலையில் உள்ளது. ஹட்டன் நகர சபை மற்றும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதனை சீர்செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அங்கு உள்ள கழிப்பறை உடன் மூடப்பட்டு நவீன முறையில் கழிப்பறை கட்டி மக்களின் நலன் பேண வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.












