மகளை கல்வி நிலையத்திற்கு அழைத்துச் சென்ற குடும்பப்பெண் ஒருவர் மகேந்திரா ரக வாகனம் மோதியதில் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்துள்ளார்.
31ஆம் கட்டை, முழங்காவில் பகுதியைச் சேர்ந்த கமல் நகுலமலர் (வயது 44) என்ற 3 பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரிவிக்கையில்,
நேற்று முன்தினம் (25) குறித்த பெண் தனது மகளை கல்வி நிலையத்திற்கு, நடந்து கூட்டிச் சென்றுகொண்டிருந்தார். இதன்போது பின்னால் வந்த மகேந்திரா வாகனம் இவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் மயக்கமடைந்தார். பின்னர் சாரதி முழங்காவில் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
படுகாயமடைந்த பெண், முழங்காவில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.