கம்பஹா, மினுவாங்கொடை, பத்தன்டுவன பிரதேசத்தில் கடந்த பெப்ரவரி மாதம் 26 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்கு உதவி செய்ததாக கூறப்படும் இரண்டு சந்தேக நபர்கள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜா – எல மற்றும் ஏக்கல ஆகிய பிரதேசங்களில் வைத்து நேற்றைய தினம் 20 மற்றும் 21 வயதுடைய இரண்டு இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
பத்தன்டுவன பிரதேசத்திற்கு கடந்த பெப்ரவரி மாதம் 26 ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் முச்சக்கரவண்டியில் இருந்த நபரொருவர் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தனர். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் சிகிச்சைக்காக கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
பாதாள உலக கும்பலைச் சேர்ந்தவரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான “கெஹெல்பத்தர பத்மே”என்று அழைக்கப்படும் மன்தினு பத்மசிறி பெரேரா ஹேவத் என்பவரின் உதவியாளர் ஒருவரே இவ்வாறு காயமடைந்துள்ளார்.
இது தொடர்பில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்கு உதவி செய்ததாக கூறப்படும் இரண்டு சந்தேக நபர்கள் ஜா – எல மற்றும் ஏக்கல ஆகிய பிரதேசங்களில் வைத்து நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடமிருந்து முச்சக்கரவண்டி மற்றும் இரண்டு கையடக்கத் தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதனையடுத்து சந்தேக நபர்கள் இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக கம்பஹா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பஹா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.