ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசின் ஆட்டம் எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுடன் நிறைவுக்கு வரும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
“கடந்த தேர்தல்களில் ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பில் பல தொகுதிகளில் வெற்றி பெற்றது. அந்தவகையில் இம்முறைத் தேர்தலிலும் எம்மால் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை இருக்கின்றது.
ஆட்சியில் உள்ள அரசின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதாக இந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் அமையும். 2018ஆம் ஆண்டு உள்ளூராட்சி சபைத் தேர்தல், 2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல், 2020ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் இதற்குச் சிறந்த உதாரணமாகும்.
இதற்கு முன்னரும் இவ்வாறான முடிவுகள் பதிவாகியிருக்கின்றன. இந்தச் சந்தர்ப்பத்தில் ஐக்கிய மக்கள் சக்தியை விட்டு வெளியேறுமளவுக்கு புத்திசுயாதீனமற்றவர்கள் எமது கட்சியில் இல்லை. ஆனால், ஊழல், மோசடியற்ற எவரும் எம்முடன் இணையலாம். ஜே.வி.பி.யைத் தவிர வேறு எந்தக் கட்சியில் இருப்பவர்களுக்கும் அதற்கு வாய்ப்பளிக்கப்படும்.
தற்போது பெலவத்தையிலுள்ள ஜே.வி.பி. அலுவலகத்தின் மனித வளங்களே நாடாளுமன்றத்தில் உள்ளன. அவர்களால் சுயமாகச் செயற்பட முடியாது. பெலவத்த அலுவலகத்தின் கட்டளைகளுக்கமையவே செயற்படுவர்.
எனவே, உள்ளூராட்சி சபைகளுக்கான உறுப்பினர்களையும் அவ்வாறு தெரிவு செய்து விட வேண்டாம். நாடாளுமன்ற உறுப்பினர்கள் பரிந்துரைப்பவர்களுக்கு வாக்களிக்காமல் மக்கள் சுயமாகச் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.
ஐக்கிய தேசியக் கட்சியுடனான பேச்சுகள் தோல்வியடையவில்லை. அதேவேளை, பிறிதொரு கட்சியுடனான கூட்டணி குறித்த பேச்சுகள் துரிதமாக நிறைவடையக் கூடியவையும் அல்ல.
எமது பேச்சுகள் உள்ளூராட்சி சபைத் தேர்தலை மாத்திரம் இலக்காகக் கொண்டதும் அல்ல. அதனைத் தொடர்ந்து நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தல், ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டது.
எனவே, பேச்சுகளை அவசரமாக நிறைவு செய்யாது பொறுமையாக முன்கொண்டு செல்வோம். அதற்கமைய ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலர் எம்முடன் இணையலாம். சிலர் அதனை நிராகரிக்கலாம். தற்போது எதையும் உறுதியாகக் கூற முடியாது.” – என்றார்.