இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்தின் ஏற்பாட்டில் நெடுதீவுக்கான களவிஜயம் ஒன்று 28.02.2025 அன்று மேற்கொள்ளப்பட்டது. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் பேராசியர் தை.தனராஜ் அவர்களின் தலைமையின் கீழ் இந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த களவிஜயத்தின்போது நெடுந்தீவு பிரதேச மக்களது மனித உரிமைகள் சார்ந்த பிரச்னைகளை தொடர்பில் நெடுந்தீவிலுள்ள பொது அமைப்புகளிடமும் பொது மக்களிடத்திலும் கலந்துரையாடப்பட்டது. அத்துடன் கல்வி மற்றும் சுகாதாரம் சார்ந்த பிரச்சினைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
இந்த கலந்துரையாடலில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் பேராசிரியர் தை. தனராஜ் ஆணைக்குழுவின் சர்வதேச விவகாரங்களுக்கான பணிப்பாளர் சட்டத்தரணி கபிலன் வில்லவராயன், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய இணைப்பாளர் திரு தங்கவேல் கனகராஜ், ஆணைக்குழுவின் மனித உரிமை அலுவலர் செல்வி குமுதினி சேவியர் நெடுந்தீவு பிரதேச செயலாளர் திருமதி நிவேதிகா, வேலணை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியகலாநிதி ஜெயக்குமார் மற்றும் தீவக கல்வி வலய பிரதிக்கல்வி பணிப்பாளர் திரு. த.தருமலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டு மக்களது பிரச்சினை தொடர்பில் ஆராய்ந்தனர்.
மேலும் இந்த கள விஜயத்தின்போது நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் அரச ஊழியர்களுக்கு மனித உரிமைகள் தொடர்பிலும் பொறுப்புடைமை தொடர்பில் விழிப்புணர்வு செயலமர்வு ஒன்று இடம்பெற்றதுடன் நெடுந்தீவு பிரதேச வைத்திசாலைக்கும் விஜயம் மேற்கொண்டு அங்குள்ள பிரச்சினைகள் தொடர்பில் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் ஆராயப்பட்டது. அத்துடன் நெடுந்தீவு பொலிஸ் நிலையத்துக்கும் கள விஜயம் மேகொள்ளப்பட்டது.
மேலும் இந்த கள விஜயத்தின் போது பெற்றுக்கொள்ளப்பட்ட அவதானிப்புகளின் அடிப்டையில் பொறுப்புவாய்ந்த அரச திணைக்கள பிரதானிகளுடன் கலந்துரையாடல் மேற்கொள்ளவும் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.




