2025 ஆம் ஆண்டுக்கான முல்லைத்தீவு மாவட்ட பிரதேச செயலாளர் மாநாடு இன்றையதினம் (28.02.2025) காலை வெலிஓயா பிரதேச செயலகத்தில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஆறு பிரதேச செயலகங்களை உள்ளடக்கியதாக மாவட்ட பிரதேச செயலாளர் மாநாடு பொது நிருவாக, மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு சுற்றறிக்கையின் பிரகாரம் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பிரதேச செயலத்தில் நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டதன் கீழ் இன்றையதினம் 2025 ஆம் ஆண்டிற்கான இரண்டாவது பிரதேச செயலாளர் மாநாடு வெலிஓயா பிரதேச செயலகத்தில் நடைபெற்றிருந்தது. இதன் முதலாவது மாநாடு கடந்த மாதம் மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்றிருந்தது.
இன்றையதினம் வெலிஓயா பிரதேச செயலகத்திற்கு வருகைதந்த மாவட்ட அரசாங்க அதிபர் பிரதேச செயலகத்தின் பௌதீக சூழலை முதலில் பார்வையிட்டார்.
தொடர்ந்து நடைபெற்ற பிரதேச செயலாளர் மாநாட்டில் பிரதேச செயலகங்களின் நிர்வாக, நிதி, திட்டமிடல் செயற்பாடுகள், முன்னேற்றங்கள், குறைபாடுகள், சமூக நலச்சேவை செயற்பாடுகள், அபிவிருத்தித் திட்டங்கள், இந்த வருடத்தில் செயற்படுத்த வேண்டிய திட்டங்கள், 2025 வரவு செலவுத் திட்டத்தில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கான நிதி ஓதுக்கீடு தொடர்பிலும் வெலிஓயா பிரதேச செயலாளர் பிரிவில் இனங்காணப்பட்டுள்ள அடிப்படைப் பிரச்சினைகள் மற்றும் அவற்றிற்கான தீர்வுகள் நடவடிக்கைகள் மற்றும் “தூய்மையான இலங்கை” (Clean Sri Lanka) திட்டத்தை செயற்படுத்துதல் உட்பட பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
இந்தக் கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன், மாவட்ட பிரதம உள்ளகக் கணக்காய்வாளர், மாவட்ட பிரதம கணக்காளர், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், மாந்தை கிழக்கு, துணுக்காய், கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான், வெலிஓயா முதலான பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளர்கள் உதவி மாவட்ட செயலாளர், உதவிப் பிரதேச செயலாளர்கள், உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள், கணக்காளர்கள், மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர், மற்றும் எனைய உத்தியோகத்தர்கள் முதலானோர் கலந்துகொண்டனர்.









