கடந்த 21ஆம் திகதி கோப்பாய் சந்தியில் இருந்து கைதடி நோக்கி செல்லும் வீதியில், விபத்தினை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற வாகனமானது இன்றையதினம் மீட்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், கைதடி – தச்சன்தோப்பு பகுதியில் வாகனமானது மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், கோப்பாய் பொலிஸாரால் இந்த மீட்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
மேற்குறித்த திகதியன்று மரணச் சடங்கின் இறுதி ஊர்வலத்தில் ஈடுபட்டவர்களை இந்த வாகனம் மோதியதில் அறுவர் படுகாயமடைந்தனர். வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அவர்களை சேர்ப்பித்தவேளை ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அன்றையதினம் இந்த வாகனத்தை செலுத்தியவரும், வாகனத்தின் உரிமையாளரும் கைது செய்யப்படவில்லை. வாகனத்தின் உரிமையாளர் கொழும்பில் இருப்பதாக தகவல் வெளியாகிய நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

