பாதாள உலகக் குழுத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவவை கொலை செய்வதற்காக சட்டத்தரணியாக மாறுவேடமிட்டு துப்பாக்கியைக் கொண்டு வந்ததாகக் கூறப்படும் காணாமல் போன பெண்ணின் தாயும், சகோதரனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு குற்றப்பிரிவினால் நேற்று திங்கட்கிழமை (24) கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
நீர்கொழும்பு, கட்டுவெல்லேகம பகுதியைச் சேர்ந்த பிங்புர தேவகே சமிந்து திவங்க வீரசிங்க என்ற 23 வயதுடைய இளைஞனும், அதே பகுதியைச் சேர்ந்த சேசத்புர தேவகே சமந்தி என்ற 48 வயதுடைய பெண்ணும் கொலை தொடர்பான தகவல்களை மறைத்து, கொலைக்கு உதவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் கணேமுல்ல சஞ்சீவவின் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய தற்போது தேடப்பட்டு வரும் இஷாரா செவ்வந்தியின் தாயார் மற்றும் இளைய சகோதரன் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
அத்தோடு, இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் இதுவரை 10 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.