உள்ளூராட்சி சபைத் தேர்தலை மிக விரைவில் நடத்துவதற்கு அரசு எதிர்பார்க்கின்றது என்றும், தேர்தலை நடத்துவதற்குத் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு எந்தவித சட்ட ரீதியான தடைகளும் இல்லை என்றும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
சித்திரைப் புத்தாண்டின் பின்னர் பொது மக்களுக்காக விசேட தலதா காட்சிப்படுத்தல் ஒன்றை ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி உறுதியளித்தார்.
அது தொடர்பில் மல்வத்து, அஸ்கிரிய பீடாதிபதிகளுடன் கலந்துரையாடியதாகவும், மத்திய மாகாண ஆளுநர், கண்டி மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகள் மற்றும் தலதா மாளிகையின் தியவடன நிலமே ஆகியோர் இணைந்து அதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்கு இணங்கியதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி தலதா மாளிகையை நேற்று ஞாயிற்றுக்கிழமை தரிசித்த பின்பே ஜனாதிபதி இதனைக் கூறினார்.
மல்வத்து மகா விகாரைக்குச் சென்ற ஜனாதிபதி, மல்வத்து மகா விகாரையின் மகாநாயக்க திப்படுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரரைச் சந்தித்து நலன் விசாரித்ததுடன், சிறிது நேரம் கலந்துரையாடினார். அவர் தலைமையிலான மகா சங்கத்தினர் செத்,பிரித் பாராயணம் செய்து ஜனாதிபதிக்கு ஆசி வழங்கினர்.
பின்னர் அஸ்கிரிய மகா விகாரைக்கு வருகை தந்த ஜனாதிபதி, அஸ்கிரிய மகா விகாரையின் வண. வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரரை சந்தித்து ஆசி பெற்றுக் கொண்டதுடன் சிறிது நேரம் கலந்துரையாடினார்.
அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்கர்கள் மற்றும் சங்கச் செயற்குழு உறுப்பினர்களும் இதன்போது கலந்துகொண்டிருந்ததுடன், மகா சங்கத்தினர் செத் பிரித் பாராயணம் செய்து ஜனாதிபதிக்கு ஆசிர்வாதம் வழங்கினர்.
அதனையடுத்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என்று தெரிவித்தார்.
பாதாள உலகக் குழுக்களிடையே மோதல்கள் வலுப் பெற்றிருந்தாலும் அது பொதுமக்களின் பாதுகாப்புக்குக்குச் சிக்கலாக அமையவில்லை என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இதுவரையில் அரசியல் அனுசரணையில் வளர்ச்சி கண்ட பாதாள உலகக் குழுக்களை முழுமையாகக் கட்டுப்படுத்த தற்போதைய அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவித்தார்.
அதேபோல் உள்ளூராட்சி சபைத் தேர்தலை மிக விரைவில் நடத்துவதற்கு அரசு எதிர்பார்ப்பதாகவும், தேர்தலை நடத்துவதற்குத் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு எந்தவித சட்ட ரீதியான தடைகளும் இல்லை என்றும், அதற்குத் தேவையான நிதியையும் அரசு ஒதுக்கியிருக்கும் நிலையில், தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அதற்கான திகதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் ஜனாதிபதி நம்பிக்கை தெரிவித்தார்.
அமைச்சர் சமந்த வித்யாரத்ன, பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குனசேன, பிரதி அமைச்சர் வைத்தியர் ஹங்சக விஜயமுனி, கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துஷாரி ஜயசிங்க, தியவடன நிலமே பிரதீப் நிலங்க தேல பண்டார உள்ளிட்டவர்கள் இதன்போது கலந்துகொண்டிருந்தனர்.








