ஸ்ரீலங்காவின் சுதந்திரநாள் தமிழர் தேசத்தின் கரிநாள் – இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் கொக்குவிலில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று மாலை நடாத்திய ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.
இவ்விடயம் தெடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்..
ஸ்ரீலங்காவின் சுதந்திர தினத்தை தமிழ்த் தேச மக்கள் சுதந்திர தினமாக கருதுவது கிடையாது.
ஸ்ரீலங்காவிற்கு சுதந்திரம் கிடைத்த பின்னர் கொண்டு வரப்பட்ட புதிய அரசியலமைப்பை தமிழ் மக்கள் நிராகரித்தே வந்திருக்கின்றனர்.
அந்த அரசியலமைப்புக்கள் மூன்றும் ஒற்றையாட்சி அரசியலமைப்பின் அடிப்படையில் கொண்டு வரப்பட்டதை தமிழ் மக்கள் நிராகரித்திருந்தனர்.
அதேபோன்று இப்போதும் புதிய அரசியலமைப்பு கொண்டு வரும் நடவடிக்கைகள் தான் முன்னெடுக்கப்படுகின்றன. இவ்வாறான ஒற்றையாட்சி அரசியலமைப்பை தமிழ் மக்கள் எப்போதும் நிராகரிப்பார்கள்.
அடிமை சாசனத்தின் அடையாளமாக இருக்கின்ற ஒற்றையாட்சி அடையாளங்களை நிராகரிக்கின்ற அதேவேளையில் தமிழில் தேசிய கீதம் பாடுவதால் எந்தவித மாற்றமும் ஏற்படப் போவதில்லை.
இவ்வாறான நிலைமையில் ஸ்ரீலங்காவின் சுதந்திர தினத்தை கரி நாளாக பார்ப்பது எம்முடைய மரபாக இருக்கிறது.
அந்தவகையில் ஸ்ரீலங்காவின் சுதந்திர நாளை கரிநாளாக அனுஸ்டித்து வருகின்றனர். அதன் அடிப்படையில் தமிழர் தாயக நிலப்பரப்பில் நாளை கரிநாள் போராட்டங்கள் நடைபெறவுள்ளன.
அவ்வாறு வடக்கு மற்றும் கிழக்கில் நடக்கவுள்ள இந்த கரிநாள் போராட்டத்தில் நாங்களும் கலந்து கொள்ள உள்ளோம்.
இதேவேளை வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் ஏற்பாட்டில் வடக்கில் கிளிநொச்சியிலும் கிழக்கில் மட்டக்களப்பிலும் நாளையதின் கரிநாள் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் கட்சி பேதங்களுக்கு அப்பால் அனைவரையும் கலந்து கொள்ளுமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.