மறைந்த மூத்த தமிழ் தலைவர் மாவை சேனாதிராஜாவின் புகழுடலுக்கு ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அஞ்சலி மரியாதை!
மறைந்த தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் புகழுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மலர்வளையம் சாத்தி தனது இறுதி அஞ்சலி மரியாதையை செலுத்தியுள்ளார்.
உடல்நிலை பாதிப்பால் கடந்த 29 ஆம் திகதி யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பெற்று வந்த மாவை சேனாதிராஜா சிகிச்சை பலனின்றி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தனது 82 வது வயதில் உயிரிழந்திருந்தார்.
மறைந்த மாவை சேனாதிராஜாவின் புகழுடல் யாழ்.மாவிட்டபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்றையதினம் (01.02.2025) அன்னாரது இல்லத்திற்கு சென்றிருந்த செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவரது புகழுடலுக்கு இறுதி அஞ்சலிமரியாதை செலுத்தியதுடன் அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும் தனது ஆறுதலையும் அனுதாபத்தையும் நினைவு பகிர்ந்தனர்.
கடந்த கால ஈழ அரசியல் வரலாற்றில் ஒரு தலைமுறை முடிவிற்கு வந்துள்ளது என அஞ்சலி செலுத்தியபின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த செயலாளர் நாயகம் மேலும் கூறுகையில்,
மூத்த அரசியல் போராளியான அண்ணன் மாவை சேனாதிராசாவின் மறைவு, ஈழத் தமிழர்களின் அரசியல் வரலாற்றில் ஒரு தலைமுறையின் முடிவாக அமைந்துள்ளது.
மேலும் ஈழத் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதற்காக 60 ஆம் ஆண்டுகளிலேயே தீவிரமாக செயற்பட்டவர்.
ஆயுதப் போராட்டத்தின் ஆரம்ப காலங்களில், அதற்கான நியாயத்தினை புரிந்து கொண்டவராக போராட்ட இயக்கங்களுடன் உறவுகளை பேணி ஒத்துழைப்புக்களை வழங்கி வந்தார்.
இலங்கை – இந்திய ஒப்பந்தத்திற்கு பின்னர், சூழல் யதார்த்தத்தினை புரிந்து கொண்டு நாம் ஜனநாயக நீரோட்டத்தில் கலந்து கொண்ட காலங்களிலும் அவருக்கும் எமக்கும் இடையில் புரிந்தணர்வு பேணப்பட்டு வந்தது.
எனினும், கால ஓட்டத்தில் அவர் சார்ந்திருந்த அரசியல் கட்சி சுவீகரித்துக் கொண்ட நிலைப்பாடுகள், எமக்கும் அவருக்கும் இடையில் கருத்தியல் வேற்றுமைகளை ஏற்படுத்திய போதிலும், பரஸ்பர புரிதல் தொடர்ந்து கொண்டே இருந்தது.
அந்த வகையில் ஈழ அரசியல் வரலாற்றில் ஒரு தலைமுறை முடிவிற்கு வந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேநேரம் மாவை சேனாதிராஜாவின் இறுதிச்சடங்கு ஞாயிற்றுகிழமை (02/02/2025,) நாளை பிற்பகல் 3 மணியளவில் மாவிட்டபுரத்தில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.