77 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு வவுனியாவில் வாகனப் பேரணி நடத்த அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வன்னி மக்கள் ஒன்றியத்தின் தலைவர் சிவஞானம் தெரிவித்துள்ளார்.
வவுனியா, கோவில்குளம் பகுதியில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
77 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு வவுனியாவில் வாழ்கின்ற தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முகமாக கடந்த ஆண்டைப் போன்று இம்முறையும் வவுனியாவில் ஒரு வாகனப் பேரணி ஒன்றை நடத்தவுள்ளோம். இது அரசியல் கலப்படம் இல்லாமல் சமூகமாக இணைந்து இதனை நடத்தி வருகின்றோம். இதற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு வாகனங்கள், முச்சக்கர வண்டிகள், பாரவூர்திகள் என்பன தேவையாகவுள்ளது.
இதற்கு கடந்த காலங்களில் முச்சக்கர வண்டி சங்கம், பாரவூர்தி சங்கம், பேருந்து சங்கம், வர்த்தக சங்கம், சிறு வியாபாரிகள் சங்கம், சர்வமத சங்கம் ஆகியோரின் ஒத்துழைப்புடன் நடத்தி வருகின்றோம்.
இந்த வருடமும் 77 ஆவது சுதந்திர தினத்தை வெற்றிகரமாக நடத்த அனைவரது ஒத்துழைப்பையும் வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றேன் எனத் தெரிவித்தார்.