“வடக்கு மக்கள் எதிர்நோக்கும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்போம். இந்த மக்களின் கோரிக்கைகளை உதாசீனம் செய்ய மாட்டோம்.” – இவ்வாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
யாழ். வடமராட்சி, வல்வெட்டித்துறையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி,
“வடக்கு மக்கள் கடந்த இரண்டு பிரதான தேர்தல்களின் போதும் தேசிய மக்கள் சக்திக்கு அளித்த வாக்குகள் வெறுமனே ஓர் அரசை அமைப்பதற்கான புள்ளடி மாத்திரம் அல்ல. மாறாக அவை இந்த நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைவதற்கு வழங்கிய வாக்குகளாகும்.
இலங்கையில் முதல் தடவையாக வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு, மலையகம் எனப் பேதமின்றி அனைத்து மக்களின் ஆதரவுடன் அரசு ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் பல தசாப்தங்களாக ஆட்சியாளர்கள் மக்களை வடக்கு, கிழக்கு, தெற்கு, மலையகம் எனப் பிளவுபடுத்தியே ஆட்சி செய்தார்கள். ஆனால், நாம் மக்களைப் பிளவுபடுத்தும் அரசியலுக்குப் பதிலாக அவர்களை ஒன்றிணைக்கும் அரசை உருவாக்கியுள்ளோம்.
இதற்கு முன்னர் நாட்டில் மேல் மட்டத்தில் இருந்த ஒரு சில குடும்பங்களிடமே அதிகாரம் இருந்தது. ஆனால், இந்த நாட்டு மக்கள் ஜனாதிபதித் தேர்தலின்போது தீர்க்கமான முடிவை எடுத்திருந்தனர். உயர் மட்டத்தில் இருந்து சாதாரண மக்களிடத்தில் அதிகாரத்தைக் கைமாற்றினார்கள். எனவே, இந்த மக்களுடனேயே எமக்கு பிணைப்பு உள்ளது. கட்டம் கட்டமாக இந்த நாட்டை நாம் மீட்டெடுப்போம்.
அஸ்வெசும கொடுப்பனவை அதிகரித்துள்ளோம். வறுமைக்கோட்டின் கீழ் வாழும் பாடசாலை மாணவர்களுக்கு கொடுப்பனவு ஒன்றை வழங்கியுள்ளோம்.
நாடளாவிய ரீதியில் அரச பாடசாலைகளில் உள்ள ஆசிரியர்கள் வெற்றிடங்களை நிரப்புவதற்கு தீர்மானித்துள்ளோம். இந்த வருடத்துக்குள் அதற்கான நடவடிக்கை எடுப்போம்.
வடக்கில் காங்கேசன்துறை, பரந்தன், மாங்குளம் ஆகிய பிரதேசங்களில் புதிய கைத்தொழிற்பேட்டைகளை நிறுவ நடவடிக்கை எடுத்துள்ளோம். வெளிநாட்டில் உள்ள புலம்பெயர்ந்த இலங்கையர்களுக்கு இங்கு முதலீடு செய்யுமாறு அழைப்பு விடுக்கின்றோம். தொழில்வாய்ப்பு இல்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு இங்கு தொழில்வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்போம்.
அரச திணைக்களங்களில் உள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். பொலிஸ் திணைக்களங்களில் தமிழ் பேசும் உத்தியோகத்தர்களுக்குப் பற்றாக்குறை உள்ளது. 2 ஆயிரம் பொலிஸ் உத்தியோகத்தர்களைச் சேவையில் இணைத்துக்கொள்ள உள்ளோம். தமிழ் பேசும் இளைஞர்களும் இதில் இணைந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றோம். இந்தப் பகுதிகளில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளது. அதனைக் கட்டுப்படுத்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம்.
அதேபோன்று காணிப் பிரச்சினை உள்ளது. மக்களின் காணிகள் மக்களிடத்திலேயே வழங்கப்பட வேண்டும். எனவே, காணி பிரச்சினைக்குத் தீர்வு பெற்றுக்கொடுப்போம். கிராமப்புறங்களில் உள்ள வீதிகளை புனரமைக்க நிதி ஒதுக்குவோம். குடிதண்ணீர் வசதிகளைப் பெற்றுக்கொடுப்போம்.
எமது மீனவர்கள் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளனர். இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு பெற்றுக்கொடுக்க நாம் தயாராக இருக்கின்றோம். மீனவர் பிரச்சினை தொடர்பில் நாம் இந்திய அரசுடன் கலந்துரையாடினோம். இலங்கைக் கடற்படைக்குப் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு பணிப்புரை விடுத்துள்ளோம். கட்டம் கட்டமாக இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்போம்.
எனவே, எமக்குச் சிறிது காலம் தாருங்கள். நிச்சயம் தீர்வு காண்போம். சுற்றுலாத்துறையை ஊக்குவிப்போம். வடக்கில் தெங்கு பயிர்ச்செய்கை மேற்கொள்வதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடு செய்ய எதிர்பார்த்துள்ளோம்.
எனவே, நாம் ஒன்றிணைந்து இந்த நாட்டை கட்டியெழுப்புவோம். கடந்த காலங்களில் இனவாத்தைப் பயன்படுத்தி அரசியல்வாதிகள் ஆட்சிக்கு வந்தார்கள். நாட்டில் மீண்டும் இனவாதம், மதவாதம் தோற்றம் பெற ஒருபோதும் இடமளிக்க மாட்டோம். இனவாதத்தைக் கையில் எடுக்கும் தரப்பினருக்கு எதிராகக் கடுமையான சட்டத்தை நாம் நடைமுறைப்படுத்துவோம்.
இனிமேலும் முரண்பட்டுக்கொண்டு நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்ல முடியாது. இனங்களுக்கிடையில் தேசிய ஒற்றுமை கட்டியெழுப்பப்பட வேண்டும். அதற்கு எமது அரசு முழு மூச்சாகச் செயற்படுகின்றது.
மக்களிடத்தில் இனவாதம், மதவாதம் இல்லை. ஆனால், அரசியல்வாதிகளிடம் இந்தப் பண்புகள் உள்ளன. தற்போது தெற்கில் இனவாத்தைத் தோற்றுவிக்க ஒரு தரப்பினர் முயற்சிக்கின்றனர்.
இந்த நாட்டை புதிய யுகத்தை நோக்கி அழைத்துச் செல்வோம். இந்த மக்கள் எம் மீது வைத்துள்ள நம்பிக்கையை ஒருபோதும் சிதைக்க மாட்டோம். கடந்த காலங்களில் இடம்பெற்ற ஊழல், மோசடி தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வோம். தண்டனை பெற்றுக்கொடுப்போம்.
கடந்த தேர்தலின்போது பிரிந்து செயற்பட்டவர்கள் மீண்டும் ஒன்றிணைய முயற்சிக்கிறார்கள். நேற்றுமுன்தினம் இரவு ஒன்றாகக் கூடியுள்ளனர். ஒரு பக்கம் மத்திய வங்கியைக் கொள்ளை அடித்தவர், மற்றைய பக்கம் ஆஸ்திரேலிய பிரஜை ஒருவரை ஏமாற்றியவர். திருடர்கள் ஒன்றிணைந்தாலும் மக்கள் ஒற்றுமையாக இருக்கும் வரையில் அவர்களுடைய எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியாது. நாம் முன்னெடுத்துள்ள விசாரணைகளை அவர்களால் நிறுத்த முடியாது. மேல் மட்டத்தில் உள்ளவர்கள் இணைந்தாலும் மக்கள் எம்முடன் இருக்கின்றார்கள். நிச்சயம் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக்கொடுப்போம்.” – என்றார்.