வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் தரம் 4 வகுப்பிற்கான வேலைத்திட்டத்தை பெற சென்ற தேசிய பாடசாலை ஆசிரியை ஒருவர் தாமதமாக தருவதாக கூறிய வர்த்தக நிலைய உரிமையாளருக்கு ஆட்களை அழைத்து மிரட்டிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நேற்று (29.01) பிற்பகல் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றுக்கு சென்ற தேசிய பாடசாலை ஒன்றின் ஆசிரியர் தரம் 4 வகுப்பிற்குரிய வேலைத்திட்டம் தருமாறு கோரியுள்ளார். வர்த்தக நிலைய உரிமையாளர் வேறு வேலைகள் இருப்பதால், ஒரு மணி நேரத்தில் அச்சிட்டு வழங்குவதாக தெரிவித்த போது அதற்குரிய பெறுமதியை உடனடியாக கூறுமாறு குறித்த ஆசிரியர் கோரியுள்ளார்.
அச்சிடப்பட்ட பின்னரே பக்கங்களின் எண்ணிக்கையைப் பார்த்து விலையை நிர்ணயிக்க முடியும் என வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் கூறிய போது, விலைகள் ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டும் என அவருடன் தர்க்கத்தில் ஈடுபட்ட ஆசிரியர் தொலைபேசியில் அழைப்பு எடுத்து இருவரை அழைத்து குறித்த வர்த்தக நிலைய உரிமையாளரை அச்சுறுத்தியுள்ளார்.
உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்ட குறித்த வர்த்தக நிலைய உரிமையாளர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டை பதிவு செய்யவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.