இன்றும் சில மருத்துவர்களை மக்கள் கடவுள்களாகவே பார்க்கின்றனர். ஒரு சில மருத்துவர்களின் செயற்பாடுகளால் மக்களின் அந்த எண்ணங்களில் மாற்றம் ஏற்படுகின்றது. உயிரைக்காக்கும் பணியில் ஈடுபடும் மருத்துவர்கள் கடவுளுக்கு நிகரானவர்கள் என்பதை மனதிலிருந்து சேவையாற்ற வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கோரிக்கை விடுத்தார்.
வடக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவ, நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் அமைச்சின் மீளாய்வுக் கூட்டம் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று வியாழக்கிழமை (16.01.2024) இடம்பெற்றது.
வடக்கு மாகாணத்தில் அண்மையில் பரவிய எலிக்காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் என்பனவற்றைக் கட்டுப்படுத்துவதில் வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் செயற்பாடு சிறப்பாக அமைந்ததாக வடக்கு மாகாண பிரதம செயலர் இ.இளங்கோவன் குறிப்பிட்டார்.
மேலும் வடக்கு மாகாணத்தில் தாதிய உத்தியோகத்தர்களின் நிலுவைக் கொடுப்பனவுகள் அனைத்தும் வழங்கப்பட்டுள்ளன எனவும் சுட்டிக்காட்டினார்.
கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களின் முன்னேற்றங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது. நடப்பு ஆண்டுக்குரிய திட்டங்கள் அனைத்தையும் இந்த மாதத்துக்குள் தயாரித்து முடிக்குமாறு அறிவுறுத்திய ஆளுநர், ஒக்ரோபர் மாதத்துக்குள் அவை செய்து முடிக்கப்பட வேண்டும் என்றும் கண்டிப்பாகக் குறிப்பிட்டார்.
சுகாதரத் திணைக்களத்தின் பணிப்பாளர் மருத்துவக் கலாநிதி. வி.பி.எஸ்.டி.பத்திரண, வடக்கில் முழு இயங்கு நிலையில் செயற்படாத மாங்குளம், கிளிநொச்சி, பருத்தித்துறை மருத்துவமனைகளில் வெளிநாட்டு நிதியுதவியில் அமைக்கப்பட்ட சிறப்பு சிகிச்சை நிலையங்களை விரைவில் இயக்குவதற்கு ஏதுவான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டது. அதனை உடனடியாகச் செயற்படுத்துவதற்கான சாதகமான நிலைமைகள் தொடர்பில் ஆராயுமாறு ஆளுநர் பணித்ததுடன், விரைவில் இது தொடர்பான கலந்துரையாடலை ஏற்பாடு செய்யுமாறும் பணித்தார்.
நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு திணைக்கள ஆணையாளர் திருமதி சுஜீவா சிவதாஸ், சான்றுபெற்ற பாடசாலை மற்றும் பாதுகாப்பு இல்லங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கான கல்வி வசதியை உறுதிப்படுத்துவதற்கான கோரிக்கையை முன்வைத்தார். அதனை உடனடியாகச் செயற்படுத்துமாறு ஆளுநர் அறிவுறுத்தல் வழங்கினார்.
மேலும் நியதிச் சட்ட ஏற்பாடுகள் போதியளவு இல்லாமையால் கொள்கை ஆவணத்துக்கான அனுமதிக்கான கோரிக்கையையும் அவர் ஆளுநரிடம் முன்வைத்தார்.
இதேவேளை சுதேச மருத்துவத் திணைக்களத்தின் ஆணையாளர் வைத்திய கலாநிதி தில்லையம்பலம் சர்வானந்தன், ஆயுள்வேத மருத்துவமனைகளின் தேவைப்பாடுகள் தொர்பில் சுட்டிக்காட்டினார். அத்துடன் சுற்றுலாவிகளை இலக்கு வைக்கும் வகையில் சுதேச மருத்துவத் திணைக்களத்தின் செயற்பாடுகள் அமையவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும் இருக்கின்ற மருத்துவ வசதிகளை ஒழுங்குபடுத்தும் வகையில் வேலணை மருத்துவமனை மற்றும் ஊர்காவற்றுறை மருத்துவமனை என்பனவற்றை ஒருங்கிணைந்து செயற்படுத்துவது தொடர்பான யோசனை சுகாதாரத் திணைக்களப் பணிப்பாளரால் முன்வைக்கப்பட்டது. முன்னோடித் திட்டமாக இதனைச் செயற்படுத்துவதற்கு முன்னதாக சம்பந்தப்பட்ட சகல தரப்பினருடனும் கலந்துரையாடுமாறு ஆளுநர் ஆலோசனை வழங்கினார்.