இலங்கைக்கான சீனத் தூதுவர் சி சென்ஹொங் மற்றும் பாத்ஃபைன்டர் பவுன்டேஷனின் ஸ்தாபகர் மிலிந்த மொரகொட ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு கொழும்பிலுள்ள சீனத் தூதரகத்தில் நடைபெற்றது.
இச்சந்திப்பின்போது இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவு குறித்தும், கடந்த 2015ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சீன – இலங்கை ஒத்துழைப்பு கற்கைகள் நிலையத்தின் செயற்பாடுகளை மையப்படுத்திய விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
குறிப்பாக, கொவிட் – 19 வைரஸ் பெருந்தொற்றுக்கு முன்னரான காலகட்டத்தைப் போன்று சீன – இலங்கை ஒத்துழைப்பு கற்கைகள் நிலையத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவை மையப்படுத்திய கலந்துரையாடல்களுக்கு சீன புத்திஜீவிகள் மற்றும் துறைசார் நிபுணர்களை உள்வாங்குவது பற்றி ஆராயப்பட்டது.
அத்தோடு இலங்கை – சீன நல்லுறவு மற்றும் அதன் கூறுகளை உள்ளடக்கி சீன மொழியில் எழுதப்பட்ட வரலாற்று நூல்களை மொழிபெயர்ப்பது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
இச்சந்திப்பில் பாத்ஃபைன்டர் பவுன்டேஷனின் தலைவர் பேர்னாட் குணதிலக மற்றும் சீனத் தூதரக அதிகாரி ஜின் என்ஸ் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.