பெண் சுயதொழில் முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருட்களின் கண்காட்சியும் விற்பனையும் இன்று(25) பரந்தன் பேரூந்து நிலைய வளாகத்தில் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.
உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்குடன், கிளிநொச்சி மாவட்டச் செயலக பெண்கள் பிரிவு மற்றும் மாவட்ட மகளிர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு நடைபெறுகின்றது.
பெண்களுடைய உற்பத்தி பொருட்களுக்கு சந்தை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும் முகமாக இன்றைய தினம் காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4.00 மணி வரை நடைபெறவுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் உதயனி நவரத்தினம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிளிநொச்சி மாவட்ட செயலக உதவித் திட்டமிடல் பண்ணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் கலந்துகொண்டு குறித்த விற்பனைக் கண்காட்சியை திறந்து வைத்தார்.
மேலும் தொழில் முயற்சியாளர்களை இணையவழி சந்தைப்படுத்தலில் இணைக்கும் நிகழ்வும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர் ம.அருந்தவராணி, தர்மம் நிலைய நிறுவுனர் த.நகுலேஸ்வரன், பெண்கள் வாழ்வுரிமைச் சங்க பணிப்பாளர் ச.வாசுகி, பிரதேச செயலகங்களின் பெண்கள் பிரிவு உத்தியோகத்தர்கள், பரந்தன் வர்த்தக சங்க அங்கத்தவர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், கிளிநொச்சி மாவட்ட மகளிர் விவகாரக் குழு சம்மேளன அங்கத்தவர்கள், தொழில்முயற்சியாளர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டிருந்தனர்.