அரசியலில் விக்னேஸ்வரனுக்கு ஏற்பட்ட நிலைமையே வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கும் ஏற்படும் என அகில இலங்கை மக்கள் எழுச்சிக் கட்சியின் தலைவர் அருள் ஜெயேந்திரன் தெரிவித்தார்.
சமகால நிலைமைகள் தொடர்பாக யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வைத்தியர் அர்ச்சுனா சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைப் பிரச்சினையைப் பயன்படுத்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியுள்ளார். அது சிறந்த விடயம். ஆனால் அந்த விடயங்களை நிரூபிக்க அவர் தவறியுள்ளார். அவர் தவறாகச் செயற்படுவதால் தற்போது பல வழக்குகளை எதிர்கொண்டுள்ளார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தியுடன், தற்போது தானே பெரிய ஆள் என்பது போல் அவர் முரண்படுகிறார். அரசியலில் விக்னேஸ்வரனுக்கு ஏற்பட்ட நிலைமையே வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கும் ஏற்படும்.
எதிர்வரும் காலத்தில் அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுவதற்கு நாங்கள் தற்போது தீர்மானித்துள்ளோம். நாட்டில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக நாங்கள் தற்போது தயாராகி வருகின்றோம். அத்துடன் வடக்கு மாகாணத்தை சிங்கப்பூராக உயர்த்துவதற்கு எம்மைப் போன்ற வர்த்தகர்களை மக்கள் தெரிவு செய்ய வேண்டும் என்றார்.