செட்டிகுளம் – மன்னார் வீதியில் கூலர் வாகனத்துடன் மோதுண்ட யானை ஒன்று காயமடைந்த நிலையில் வீதியருகில் வீழ்ந்து கிடக்கின்றது.
இன்று(17) அதிகாலை இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, செட்டிகுளம் – மன்னார் வீதியில் உள்ள பெரியகட்டுப் பகுதியில் வீதியில் நின்ற யானை ஒன்றுடன் மன்னாரில் இருந்து மதவாச்சி நோக்கி மீன்களை ஏற்றிக்கொண்டு அந்த வீதியால் வந்த கூலர் ரக வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. கூலர் வாகனம் கடுமையாகச் சேதமடைந்துள்ளதுடன் அதில் பயணித்த ஒருவர் காயமடைந்துள்ளார்.
விபத்தில் காயமடைந்த யானை வீதியோரத்தில் நீர் உள்ள குழி ஒன்றில் காயத்துடன் வீழ்ந்து கிடந்து உயிருக்குப் போராடுகின்றது.
இந்தச் சம்பவம் தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்களத்துக்குப் பொதுமக்களால் தகவல் வழங்கப்பட்டதையடுத்து வனஜீவராசிகள் திணைக்களத்தால் யானைக்குச் சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது.
இது தொடர்பான விசாரணைகளை செட்டிகுளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.