இராணுவத்தில் கடமையாற்றிய 23 வயதுடைய யுவதி ஒருவர் பொல்லால் தாக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளது. சம்பவத்தில் எம். அஹிம்சா சமன்மாலி என்ற இந்த யுவதியே உயிரிழந்துள்ளார்.
குறித்த யுவதி இளைஞன் ஒருவனின் காதலை ஏற்றுக்கொள்ள மறுத்ததால் கொல்லப்பட்டதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இரத்தினபுரி – சிறிபாகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடவல, கிலிமலே வெலேகொட வீதியில் நேற்று முன்தினம் (04) காலை 7.30 மணியளவில் குறித்த யுவதி படுகொலை செய்யப்பட்ட நிலையில், சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
காதலை ஏற்க மறுத்த யுவதியை இளைஞன் பொல்லால் தாக்கியதில் படுகாயமடைந்த யுவதி, இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த யுவதி நான்கு வருடங்கள் இராணுவத்தில் கடமையாற்றியவர்.
முச்சக்கரவண்டியில் நடமாடும் பாண் விற்பனையில் ஈடுபட்டு வந்த இளைஞன் பலமுறை காதலிக்கக் கேட்டதாகவும், ஆனால் அவர் மறுப்பு தெரிவித்ததாகவும் யுவதியின் குடும்பத்தினர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
குறித்த யுவதி இரத்தினபுரி நகரில் உள்ள வர்த்தக நிறுவனமொன்றில் அலுமாரி ஒன்றை எடுத்து வருவதற்காக வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்ற வேளையில் சிறிபாகம சுதாகல வீதியில் யுவதி நடந்து சென்ற போது பின்னால் வந்து அவரது தலையில் தாக்கியதாகவும், தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட தடியை பொலிஸார் கண்டுபிடித்ததுடன், தாக்குதல் இடம்பெற்ற இடத்தில் இரத்தக் கறைகளும் காணப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த யுவதியின் பிரேத பரிசோதனை நேற்று (05) முன்னெடுக்கப்பட்ட நிலையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.